» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

செய்யாத தவறுக்காக கட்சியில் இருந்து நீக்கம்: ரூபி மனோகரன் வேதனை

வியாழன் 24, நவம்பர் 2022 3:30:07 PM (IST)

செய்யாத தவறுக்காக என்னை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது என காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ரூபி மனோகரன் கூறியுள்ளார். 

சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கடந்தவாரம் அக்கட்சியைச் சேர்ந்த இரு குழுவினர் இடையே மோதல் நடைபெற்றது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ரூபி மனோகரன் மீதும், தமிழக காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு தலைவராக இருக்கும் ரஞ்சன்குமார் மீதும் புகார்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, இருதரப்பும் இன்று விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஒழுங்கு நடவடிக்கைக்குழுத் தலைவராக இருக்கும் கே.ஆர்.ராமசாமி அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று நடந்த விசாரணையின்போது, ரஞ்சன் குமார் நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். ஆனால் இந்த விசாரணைக்கு, காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் ஆஜராகவில்லை.

இந்நிலையில் ஒழுங்கு நடவடிக்கைக்குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "இதுவரை இந்த பிரச்சினை தொடர்பாக மாவட்டத் தலைவர்கள் 63 பேர் சேர்ந்து ஒரு புகார் மனு அளித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்க கோரி, ரூபி மனோகரன் என்னிடம் தொலைபேசி மூலமாகவும் கேட்டார். அதேபோல் கடிதமும் அளித்துள்ளார். ரூபி மனோகரனை காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்துள்ளோம். அடுத்த ஒழுங்கு நடவடிக்கை கூட்டத்திற்கு அவர் தனது தரப்பு விளக்கத்தை நேரில் ஆஜராகி தெரிவிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக ரூபி மனோகரன் கூறியதாவது:- நான் 20 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வருகிறேன். நாங்குநேரி தொகுதியில் அதிக அளவில் உறுப்பினர்களையும் சேர்த்துள்ளேன். நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. செய்யாத தவறுக்காக என்னை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது. சட்டமன்ற தொகுதியில் எனக்கு பல வேலைகள் உள்ளன. அதனால் தான் இன்று ஆஜராகவில்லை. எனது விளக்கத்தை கேட்ட பின்னர் தானே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory