» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ரப்பர் கழகங்களை மூடும் முடிவை கைவிட அரசு வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்

வியாழன் 24, நவம்பர் 2022 12:26:27 PM (IST)

குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகங்களை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம், அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதார தேவைக்காக ஊதிய உயர்வு கோரி கடந்த 7 – ந்தேதி முதல் காலவரையறையற்ற போராட்டம் நடத்தி கொண்டிருப்பது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அரசு ரப்பர் கழகம் ரப்பர் கழக சொத்துகளை வனத்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துவருவதாக வெளியாகும் தகவல் வருத்தமளிக்கிறது. 

குமரி மாவட்டத்தில் அரசுத் துறையின் கீழ் ரப்பர் தோட்டங்கள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்பு பெருக்க வேண்டும் என்ற அடிப்படையில், கீரிப்பாறை, பெருஞ்சாணி, மைலார் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் அரசு ரப்பர் தோட்டம் உருவாக்கப்பட்டு, ரப்பர் உற்பத்தியும் பெருகிய நிலையில் 1984 முதல் அரசு ரப்பர் கழகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது, ரப்பர் கழக நிலப்பரப்பின் பகுதிகளில் ரப்பர் பயிரிடாமல், சொத்துகளை வனத்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால், தொழிலாளர்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவி வருகிறது.

கோவை வால்பாறை அருகே சின்கோனா பகுதியில் உள்ள டேன் டீ அரசு தேயிலை தோட்டம், நீலகிரி கூடலூர், நடுவட்டம், குன்னூர் டேன் டீ தேயிலை தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்து, அவர்களது வாழ்வாதாரத்தை முடக்கியது போல, குமரியிலும் அதேசூழ்நிலையை உருவாக்கி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அலட்சியம் செய்வது கண்டிக்கத்தக்கது. 

இந்திய அளவில் தரமான ரப்பர் தயாரிக்கும் குமரி மாவட்டத்தின் சூழல் இயற்கையாகவே ரப்பர் விளைவதற்கு ஏற்றதாக இருக்கும்போது, அதை ஏன் வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுத்த பின்னர் அதனை மீண்டும் பறிப்பது போல அரசு நடந்து கொள்வது நியாயமா? ஆயிரக்கணக்கான ஏழைத் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்கும் முடிவினை கைவிட்டு, ரப்பர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து, ஊதிய உயர்வு கோரிக்கைகளை பரிசீலித்து இப்பிரச்சனையை தீர்க்க வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory