» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் 4 நாட்கள் தங்கிய ஷாரிக்குடன் தொடர்பில் இருந்த நபர்கள் யார்?: உளவுத்துறை விசாரணை

புதன் 23, நவம்பர் 2022 4:07:44 PM (IST)



மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய முகமது ஷாரிக், குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் தங்கியிருந்தபோது யார், யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

கர்நாடகா மாநிலம் மங்களூரூ நாகுரி பகுதியில் கடந்த 18-ந் தேதி ஆட்டோவில் குண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்டுத்தியது. ஆட்டோவில் வெடித்தது குக்கர் வெடிகுண்டு என போலீசார் விசாரணையில் தகவல் கிடைத்தது. குண்டு வெடித்ததில் ஆட்டோவில் வந்த ஒருவரும், டிரைவரும் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோவில் காயத்துடன் மீட்கப்பட்டவன் தான் குக்கர் குண்டு கொண்டு வந்தவன் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அவனைப் பற்றி விசாரித்ததில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஷாரிக் என்ற முகமது ஷாரிக் (22) என்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவனது செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அவன் தனது அடையாளத்தை மறைத்து செல்போனில் பிரேம்ராஜ் என்ற பெயரில் சிவன் 'ஸ்டேட்டஸ்' வைத்து பலருடன் பழகி உள்ளான்.

ஷாரிக் யார்? யாருடன் பேசி உள்ளான் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது பல பெண்களுடன் அவன் பேசியிருப்பது தெரிய வந்தது. நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பேசியது குறித்து தகவல் கிடைத்ததும், அந்தப் பெண்ணை குமரி மாவட்ட போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர்.

ஆனால் அது தவறுதலாக வந்த அழைப்பு என தெரிய வந்தது. அந்தப் பெண் மொழி தெரியாததால், தனது 'பாஸ்ட் புட்' கடையில் வேலை பார்த்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜிம் ரகுமான் என்பவரை வைத்து போனில் பேசியதாக தெரிவித்தார். எனவே அஜிம் ரகுமானுக்கு, ஷாரிக்குடன் தொடர்பு இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

நாகர்கோவில் கோட்டாரில் தங்கியிருந்த அஜிம் ரகுமானை நள்ளிரவில் பிடித்த போலீசார், ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். சுமார் 30 மணி நேரம் அவனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவனுக்கும் ஷாரிக்குக்கும் தொடர்பு இல்லை என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 30 மணி நேர விசாரணைக்கு பிறகு அஜிம் ரகுமானை போலீசார் விடுவித்தனர்.

இதற்கிடையில் மங்களூரூ போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகம் மற்றும் கேரளாவுக்கு ஷாரிக் கடந்த செப்டம்பர் மாதம் வந்து சென்றிருப்பது தெரிய வந்தது. ஏற்கனவே கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருப்பதால், அதற்கும் ஷாரிக்குக்கும் தொடர்பு இருக்கலாமா? அவன் தமிழகத்திலும் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட சதி திட்டம் தீட்டினானா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

கோவை போலீசாருடன் இணைந்து நடத்திய இந்த விசாரணையில், கடந்த செப்டம்பர் 3-ந் தேதி, ஷாரிக் கோவை வந்திருப்பது தெரியவந்தது. கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் அவன் அறை எடுத்து தங்கி உள்ளான். அப்போது கவுரி என பெண் பெயரை கொடுத்து அறை எடுத்துள்ளான். கோவையில் சில நாட்கள் தங்கியிருந்த அவன், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றுள்ளான். 

அங்கு அவன் யாரை சந்தித்தான்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் இருந்து மதுரை வந்த ஷாரிக், அங்கு ஒரு நாள் தங்கிவிட்டு, குமரி மாவட்டம் வந்துள்ளான். நாகர்கோவிலில் 4 நாட்கள் அவன் அறை எடுத்து தங்கி இருந்ததாக, மங்களூரூ போலீசார் தெரிவித்து உள்ளனர். ஆனால் அவன் எந்த விடுதியில் தங்கினான்? என்ன பெயரில் தங்கினான் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து குமரி மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்பி ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில், கடந்த செப்டம்பர் மாதம் குமரி மாவட்ட விடுதிகளில் தங்கியவர்கள் யார்? யார்? அவர்கள் கொடுத்த முகவரி சரியானதுதானா? என போலீசார் விவரங்களை சேகரித்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் இருந்து தான், ஷாரிக் கேரளா சென்றுள்ளார். 

எனவே அவன் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் குற்ற சம்பவங்களை நடத்த சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் முதல் கட்டமாகத்தான் மங்களூரூ ரெயில் நிலையத்தில் தாக்குதல் நடத்த குக்கர் வெடிகுண்டுடன் ஆட்டோவில் சென்று இருக்கலாம். ஆனால் எதிர்பாராதவிதமாக பயணத்தின் போது ஆட்டோவிலேயே குக்கர் குண்டு வெடித்ததால், சதி செயல் திட்டமிட்டபடி நடைபெறவில்லை என போலீசார் கருதுகின்றனர்.

ஷாரிக் தற்போது மருத்துவமனையில் இருந்தாலும், அவன் கடந்த சில மாதங்களாகவே சதி செயலுக்கு திட்டம் தீட்டி இருப்பதால், அவனது கூட்டாளிகள் வேறு ஏதும் திட்டம் வைத்துள்ளார்களா? அவர்கள் யார்? எங்கு உள்ளார்கள்? என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமையினரும், 'ரா' உள்ளிட்ட உளவுத்துறையினரும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory