» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கொத்து, கொத்தாக கரை ஒதுங்கிய வௌமீன்கள்: குமரியில் இளைஞர்கள் உற்சாகம்

புதன் 10, ஆகஸ்ட் 2022 4:35:14 PM (IST)குமரி மாவட்டத்தில் மணக்குடி முதல் சங்குத்துறை கடற்கரை வரை அலையில் கூட்டம், கூட்டமாக வௌமீன்கள் கரை ஒதுங்கின. அவற்றை ஏராளமான இளைஞர்கள் திரண்டு பிடித்து சென்றனர்.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் ஆரோக்கியபுரம் முதல் நீடோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் பெரும்பாலான மீனவர்கள் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஒரு சில கட்டுமரம் மீனவர்கள் மட்டும் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் வலையில் குறைந்த அளவு மீன்கள் மட்டுமே சிக்கியது. குறைவான அளவு மீன்கள் விற்பனைக்கு வந்ததால் விலை அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் குமரி கடல் பகுதியில் கொட்டி தீர்த்த மழையால் கடலுக்குள் இருந்த மீன்கள் கரை ஒதுங்கி வருகிறது. குறிப்பாக மணக்குடி முதல் சங்குத்துறை கடற்கரை வரை மீன்கள் கரை ஒதுங்குவதாக தகவல் பரவியது. இதையடுத்து சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கடந்த 2 நாட்களாக கடற்கரை பகுதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அந்த பகுதிகளில் கூட்டம் அலைமோதுகிறது.

நேற்று காலையில் அளவுக்கு அதிகமாக வெளமீன்கள் கரை ஒதுங்கியதால் காலையில் இருந்து மாலை வரை ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பெரியவர்களும், பெண்களும் கடற்கரையில் திரண்டனர். ராட்சத அலைகள் கரைக்கு வரும் போது கூட்டம் கூட்டமாக மீன்கள் அடித்து வரப்பட்டது. அலைகள் மீண்டும் கடலுக்குள் திரும்ப செல்லும் போது வாலிபர்கள் மீன்களை கையால் பிடித்தார்கள். அவர்களது கையில் ஏராளமான மீன்கள் சிக்கியது. குறிப்பாக அதிக அளவு வெளமீன்கள் சிக்கியுள்ளது. இது அந்த பகுதியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இளைஞர்கள் கூறும்போது, 'கடற்கரையில் மீன்கள் கரை ஒதுங்குவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் நாங்கள் இங்கு வந்தோம். அப்போது மீன்கள் கரை ஒதுங்குவதை பார்த்து ரசித்து கொண்டிருந்தோம். எங்களுக்கு மீன்களை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதையடுத்து கரைக்கு வந்த மீன்கள் கையால் பிடித்தும் அதிகளவு மீன்கள் எங்களிடம் சிக்கி உள்ளது. இந்த மீன்களை சமைத்து சாப்பிடுவதுடன் நண்பர்கள் வீடுகளுக்கும் பகிர்ந்து கொடுக்க உள்ளோம், என்றனர்.

இதற்கு முன்பு 2004-ம் ஆண்டு சுனாமி வந்த போது கடல் அலையில் கரை ஒதுங்கிய மீன்களை சுற்றுவட்டார கிராம மக்கள் எடுப்பதற்காக வந்த போது ஏராளமானோர் கடல் அலையில் சிக்கி உயிரை விட்டது குறிப்பிடத்தக்கது. அதுபோல சம்பவம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மீன்கள் அலையில் கரை ஒதுங்குவதற்கான காரணம் குறித்து அந்த பகுதி மீனவர்கள் கூறியதாவது:  கடல் பகுதியில் கொட்டித் தீர்த்த மழையின் காரணமாக கடலில் குளிர்ந்த நீரோட்டம் ஏற்பட்டதால் வெளமீன்கள் கரை ஒதுங்கி வருகிறது. அதாவது மழையும் காற்றும் ஒரே நேரத்தில் அடிப்பதால் கடலில் உள்ள நீர் குளிர்ந்த நிலையில் மாறுகிறது. குளிர்ந்த காற்று பட்டதும் வெள மீன்கள் இறந்த நிலையில் கரையில் ஒதுங்குகிறது. சில வெளமீன்கள் அரைகுறை உயிருடன் கரை ஒதுங்குகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் வெள மீன்கள் கரை ஒதுங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதிகப்படியான மீன்கள் கரை ஒதுங்குகிறது. இந்த மீன்களை சாப்பிடுவதனால் எந்த பாதிப்பும் கிடையாது, என்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory