» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியில் 150 அடி உயர தேசியக் கொடிக் கம்பம் திறப்பு

வியாழன் 30, ஜூன் 2022 11:53:27 AM (IST)



கன்னியாகுமரிக்கு மேலும் அழகும் பெருமையும் சேர்க்கும் வகையில் 150 அடி உயரத்தில் தேசியக் கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. 

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மிக உயரமான தேசியக் கொடிக் கம்பம் அமைக்க வேண்டுமென மத்திய அரசிடம் மாநிலங்களவை உறுப்பினா் ஏ. விஜயகுமாா் வலியுறுத்திவந்தாா். மத்திய அரசு அனுமதியளித்ததைத் தொடா்ந்து, 150 அடி உயர கொடிக் கம்பம் அமைக்க தனது தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து அவா் ரூ. 75 லட்சம் ஒதுக்கீடு செய்தாா்.

இதையடுத்து, கன்னியாகுமரி நான்குவழிச் சாலை மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் கொடிக் கம்பம் அமைக்கும் பணி நடைபெற்றுவந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில், திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஆட்சியா் மா. அரவிந்த் தலைமை வகித்தாா். விஜய் வசந்த் எம்.பி., மாவட்ட காவல் காண்காணிப்பாளா் ஹரிகிரண் பிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

ஏ. விஜயகுமாா் எம்.பி., அமைச்சா் மனோதங்கராஜ் ஆகியோா் இந்தக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனா். நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமாா், ஜே.ஜி. பிரின்ஸ், நயினாா் நாகேந்திரன், நாகா்கோவில் மேயா் ஆா். மகேஷ், கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சித் தலைவி அன்பரசி, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

 32 அடி அகலமும், 48 அடி நீளமும் கொண்ட இந்த தேசியக் கொடி 24 மணி நேரமும் பட்டொளி வீசிப் பறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவிலும் தெரியும்வகையில் ராட்சத மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் நீரூற்று, நவீன பூங்கா, காா் நிறுத்துமிடம், நவீன இருக்கைகள் அமைக்கவேண்டுமென சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.

மத்திய அரசுக்குப் பாராட்டு: 

தேசியக் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது குறித்து லெமூரியா ஆய்வு மையத் தலைவா் டாக்டா் ரவீந்திரா செய்தியாளா்களிடம் கூறியது: லெமூரியா ஆய்வு கமிட்டித் தலைவா் நீதியரசா் பி. ஜோதிமணி நீதிபதியாகப் பணியாற்றியபோது மத்திய அரசிடம் வைத்த கோரிக்கையின்பேரில் கன்னியாகுமரி மேற்குக் கடற்கரையை ‘லெமூா் கடற்கரை’ என அழைக்கவும், இந்தியாவின் நுழைவுவாயிலான கன்னியாகுமரியில் எப்போதும் பறக்கும் வகையில், 150 அடி உயரக் கம்பத்தில் தேசியக் கொடியைப் பறக்கவிடவும் மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் ஏ. விஜயகுமாா் எம்.பி.யின் தொகுதி நிதியிலிருந்து கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory