» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு: அதிநவீன படகுகளில் ரோந்து!

செவ்வாய் 28, ஜூன் 2022 12:43:28 PM (IST)

குமரி கடற்கரை மற்றும் கடற்பகுதிகளில் அதிநவீன வாகனங்கள் மூலம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். 

கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் உள்ளூர் சட்டம்-ஒழுங்கு போலீசாரும் இணைந்து சாகர்கவாச் என்னும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை இன்றும் நாளையும் நடத்துகிறார்கள். அதன்படி கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடல் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை இன்று காலை 8 மணிக்கு தொடங்கினார்கள். 

இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நாளை மாலை வரை தொடர்ந்து நடக்கிறது. கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 3 அதிநவீன ரோந்து படகுமூலம் கடலுக்குள் சென்று பயங்கரவாதிகள் ஊடுருவுகிறார்களா? என்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான ஒரு குழுவினர் இந்தியப் பெருங்கடல் அமைந்து உள்ள கன்னியாகுமரி கடல் பகுதியிலும் சப்-இன்ஸ்பெக்டர் நம்பியார் தலைமையில் ஒரு குழுவினர் வங்க கடல் அமைந்து உள்ள கன்னியாகுமரி-உவரி இடையே உள்ள கடல் பகுதியிலும் சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் மற்றொரு குழுவினர் அரபிக்கடல் அமைந்து உள்ள கன்னியாகுமரி முதல் தேங்காய்ப்பட்டனம் வரை உள்ள கடல் பகுதியிலும் அதிநவீன ரோந்து படகில் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இது தவிர கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 72 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரைப் பகுதிகளில் வாகனங்களில் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் உள்ள 42 கடற்கரை கிராமங்களிலும் கடலோர பாதுகாப்பு போலீசாரும் உள்ளூர் போலீசாரும் இணைந்து இரவு பகலாக 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து ஜீப் மூலம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடற்கரை பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் மோட்டார் சைக்கிளிலும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். சின்னமுட்டம், பஞ்சலிங்கபுரம், மகாதானபுரம், தேங்காய்பட்டணம், கூடங்குளம் உள்பட 10 இடங்களில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்தமான சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாறு வேடங்களிலும் கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கன்னியாகுமரி பகுதியில் உள்ள லாட்ஜூகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory