» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ரூ.14 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் தூத்துக்குடி, திருச்செந்தூர் பஸ்கள்!

வியாழன் 26, மே 2022 5:11:08 PM (IST)

பாளை.யில் ரூ.14 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பஸ் நிலையத்தை தூத்துக்குடி, திருச்செந்தூர் வழித்தட பஸ்கள் புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது. 

நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாளை பஸ் நிலையம் சுமார் ரூ.14 கோடி செலவில் முழுவதுமாக இடிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே பழைய மேயர் குடியிருப்பு பகுதி இடிக்கப்பட்டு அங்கு வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையில் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இருப்பதால் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இதற்கு முன்பு பழைய பஸ் நிலையம் இருந்தபோது திருச்செந்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்கள் பாளை பஸ் நிலையத்திற்குள் வந்து நின்று செல்லும். ஆனால் தற்போது உள்ள பஸ் நிலையத்தில் ஒரு நேரத்தில் 4 முதல் 5 பஸ்கள் வரை மட்டுமே நின்று செல்லும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.இதனால் மாநகர பகுதியில் இயக்கப்படும் டவுன் பஸ்கள் மட்டுமே பஸ் நிலையத்திற்குள் சென்று வருகிறது. மற்ற வழித்தடங்களுக்கு செல்லும் பஸ்கள் இந்த பஸ் நிலையத்திற்குள் வராமல் புறக்கணித்து செல்கின்றன.

பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்திற்குள் தினமும் சொற்ப எண்ணிக்கையிலேயே பஸ்கள் வந்து செல்கிறது. இதனால் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.  திருச்செந்தூர், தூத்துக்குடி, விளாத்திகுளம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்கள் பஸ் நிலையத்தை புறக்கணித்து செல்கின்றன. அவை பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் சிக்னல் வழியாக பஸ் நிலையத்திற்கு எதிர்ப்புறத்தில் ஐகிரவுண்டு சாலையில் நின்று செல்கிறது.

இதன் காரணமாக பயணிகள், பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள பழமையான மரத்தின் நிழலில் காத்து நிற்கின்றனர். பல கோடி ரூபாயில் பஸ் நிலையம் கட்டப்பட்டு அங்கு இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் திருச்செந்தூர், தூத்துக்குடி செல்லும் பயணிகள் வெயிலில் காத்து நின்று பஸ் ஏற வேண்டி உள்ளது.

எனவே திருச்செந்தூர், தூத்துக்குடி செல்லும் பஸ்களை பாளை பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. அனைத்து பஸ்களும் அங்கு சென்று வந்தால் ஏலம் எடுக்கப்படாத கடைகளும் ஏலத்தில் எடுக்கப்படும் என்பதால் மாநகராட்சி நிர்வாகம் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory