» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் மிளகு சீசன் தொடங்கியது : விவசாயிகள் மகிழ்ச்சி

திங்கள் 10, ஜனவரி 2022 5:02:14 PM (IST)

குமரி மாவட்டத்தில் கருப்பு தங்கம் என அழைக்கப்படும் மிளகு சீசன் தொடங்கியது. அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கருப்புத் தங்கம் என மிளகு வர்ணிக்கப்படுகிறது. நறுமணப் பயிரான மிளகின் தாயகம் தென்னிந்தியா ஆகும். தென்னிந்தியாவில் கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் மிளகு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் தங்கலாம்’ என்ற முதுமொழியால் மிளகின் மருத்துவ குணத்தை அறிந்து கொள்ளலாம்.
 
பண்டைய இந்தியாவின் கடல் வாணிபத்தில் மிளகு முக்கிய இடம் பிடித்துள்ளது. ஐரோப்பிய உள்ளிட்ட அன்னிய நாட்டினர் கடல் மார்க்கமாக இந்தியா வந்து வணிகம் செய்ய ஆசைப்பட்டதற்கு இங்கு விளையும் மிளகும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்வதுண்டு. இந்தியாவில், பணப்பரிமாற்றம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக பண்டமாற்று முறையில் ஒரு பொருளுக்கு மாற்றாக மிளகை கொடுக்கும் வழக்கம் அதிகமாக இருந்துள்ளது. பின்னர், பிற்காலங்களில் மியான்மர், இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளில் மிளகு சாகுபடி பரவியது.

மிதவெப்ப கால நிலையைக் கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறுகாணி, பத்துகாணி, கொண்டைகட்டிமலை, ஆலஞ்சோலை, பனிச்சமூடு, களியல், பேச்சிப்பாறை, குலசேகரம், சுருளகோடு, பாலமோர், மாறாமலை, தடிக்காரன்கோணம், வேளிமலை, கரும்பாறை, முக்கடல் மற்றும் பழங்குடி குடியிருப்புகளான தோட்டமலை, தச்சமலை, முகளியடி உள்ளிட்ட இடங்களில் சுமார் 1000 எக்டர் வரை மிளகு சாகுபடியாகிறது.
 
குறிப்பாக மலைவாழ் பழங்குடி மக்கள் தங்களது குடியிருப்பு பகுதிகளில் மிளகு சாகுபடி செய்வதன் மூலம் குறிப்பிட்ட அளவில் வருவாய் பெறுகின்றனர். கொடி வகை பயிரான மிளகு கொடிகள் இங்குள்ள மக்கள் பூவரசு, கல்லியாணமுருங்கை, தென்னை, கமுகு உள்ளிட்ட மரங்களில் படர்த்தி தனிப் பயிராகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்கின்றனர்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் விளையும் மிளகிற்கு உலக அளவில் சந்தை வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன.

பொதுவாக நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரை மிளகு சீசன் காலமாகும். இந்த காலங்களில் கொடிகளில் விளைந்த மிளகு தார்களை பறித்து, பின்னர் அவற்றில் இருந்து மிளகு முத்துகளை பிரித்தெடுக்கின்றனர். தொடர்ந்து அவைகளை வெயிலில் உலர வைத்து விற்பனை செய்கின்றனர். அதன்படி 3 கிலோ பச்சை மிளகை உலர வைத்து கழிவுகளை நீக்கினால் ஒரு கிலோ சுத்தமான மிளகு கிடைக்கிறது. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால், மிளகு கொடிகளில் தார் பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனால், தற்போது மிளகு உற்பத்தி குறைவாக உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். 

இந்த ஆண்டு மிளகு விளைச்சல் மற்றும் உற்பத்தி குறைவாக இருந்த போதிலும், கடந்த ஆண்டை விட கிலோவிற்கு ரூ.150 வரை விலை அதிகமாகக் கிடைக்கிறது. இது குமரி மாவட்ட மிளகு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால், விவசாயிகள் மிளகை உற்சாகமாக அறுவடை செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory