» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை : ஆட்சியர் ஆலோசனை!

வியாழன் 6, ஜனவரி 2022 3:39:46 PM (IST)



கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து, உயர்மட்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தலைமையில் இன்று நடைபெற்றது.
 
நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை (கட்டடம், நீர்வளம்), ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, மின்சாரத் துறை, மீன்வளத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில்  நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு, கட்டடம், கடலரிப்பு தடுப்புக் கோட்டம், நெடுஞ்சாலை ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் மற்றும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சி மூலம் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணி, பழுதடைந்த சாலைகளை செப்பனியிடும் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிடவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

மேலும், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து குடியிருப்பு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கிடும் திட்டத்தினை விரைந்து செயல்படுத்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மலைவாழ் பகுதிகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித்திட்ட பணிகளை பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி அலுவலர்கள் ஆகியோர் வனத்துறையினருடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்திட அறிவுறுத்தப்பட்டது. 

வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ள பெருக்கினால் ஏற்பட்ட கால்வாய் உடைப்புகள், பழுதடைந்த நீர்நிலைகள் மற்றும் சாலைகளை பழுது நீக்கி சீரமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வாயிலாக வன சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு வன அலுவலர் அனுமதியோடு, இணைந்து செயல்பட துறை அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது. 

மேலும், தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள கிணறுகளின் எண்ணிக்கையினை கணக்கெடுத்து அவற்றை அந்தந்த பகுதிகளிலுள்ள உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக பராமரிக்கும்படி துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வளர்ச்சி பணிகளின் செயலாக்கத்தின்போது ஏற்படும் தடைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், இப்பணிகள் மேற்கொள்ளும்போது ஏதேனும் தடைகள் மற்றும் இடர்பாடுகள் ஏற்பட்டால் அதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் அலர்மேல் மங்கை, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) ச.சா.தனபதி உட்பட அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory