» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மீன் நாற்றம் வீசுவதாக மூதாட்டியை பஸ்சில் இருந்து இறக்கிவிட்ட கண்டக்டர் மீது நடவடிக்கை!

புதன் 8, டிசம்பர் 2021 11:38:00 AM (IST)மீன் நாற்றம் வீசுவதாக கூறி மூதாட்டியை இறக்கிவிட்ட அரசு பேருந்து நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே வாணியக்குடி கடற்கரை கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். மூதாட்டி தினமும் காலையில் தலைசுமடாக மீன்களை எடுத்து சென்று குளச்சல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள மீன்களை மாலையில் குளச்சல் மார்க்கெட்டில் விற்பனை செய்வார்.

இரவு குளச்சலில் இருந்து மகளிருக்கான அரசு இலவச பேருந்தில் வீடு திரும்புவது வழக்கம். நேற்று மூதாட்டி மீன்களை விற்பனை செய்துவிட்டு இரவு குளச்சல் பஸ் நிலையத்தில் இருந்து வாணியக்குடி செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். மூதாட்டியை கண்ட கண்டக்டர் அவர் மீது மீன் நாற்றம் வீசுவதால் பஸ்சில் இருந்து இறக்கி விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டி பஸ் நிலைய கட்டுப்பாட்டு அலுவலகம் முன் சென்று நியாயம் கேட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். 

போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டி அங்கிருந்த பயணிகளிடம் தன் ஆதங்கத்தை கூறியபடி கண்கலங்கி நின்றதை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப்பில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. பஸ் கண்டக்டரின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ உயர் அதிகாரிகளின் பார்வைக்கும் சென்றுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் துர்நாற்றம் வீசுவதாக மூதாட்டி செல்வத்தை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், மூதாட்டியின் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத குளச்சல் பேருந்து நிலைய சமய குறிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை போக்குவரத்து துறை பொது மேலாளர் அரவிந்த் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் தமிழ்நாடு போக்குவரத்து துணை இயக்குநர் ஜெரோலின், அந்த மூதாட்டியிடம் நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார். மீன் விற்று பிழைப்பு நடத்தும் முதாட்டியின் மனது புண்படும்படி அரசு பேருந்து நடத்துநர் நடந்துகொண்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பெண்களிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

திங்கள் 17, ஜனவரி 2022 10:46:51 AM (IST)

Sponsored AdsThoothukudi Business Directory