» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பணியின்போது மரணமடைந்த 9 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை : அமைச்சர் வழங்கல்

புதன் 13, அக்டோபர் 2021 5:29:55 PM (IST)



பணியின்போது மரணமடைந்த 9 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணையினை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கன்னியாகுமரி மின்பகிர்மான வட்டம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சார்ந்த பணியின்போது மரணமடைந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி, பேசுகையில் "தமிழக முதலமைச்சர் அனைத்துத் தரப்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசாக செயல்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தை பொறுத்தவரையில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் குறித்து, அந்தந்த துறைசார்ந்த அலுவலர்கள் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது. 

இதனைத்தொடந்து நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும். அரசுத்துறைகளில் பணிபுரியும் அனைவரும் இப்பணி நம் அனைவருடைய தலையாய கடமை மற்றும் பொறுப்பு என்பதை உணர்ந்தும் சொந்த மாவட்டத்தில் பணிபுரிகிறோம் என்ற உணர்வோடு செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். நிறைவாக பணியாற்றி, பணி நிறைவடையும்போது நீங்கள் திரும்பி பார்க்கும்போது அது உங்களுக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரும். தமிழக முதலமைச்சர் அவர்களிடம் வரப்பெறும் கோரிக்கை மனுக்களில் 80 சதவீதம் நபர்கள் வேலைவாய்ப்பு கேட்டு வருகின்றது. 

எனவே, இங்கு பணிநியமன ஆணை பெற்றுள்ள நீங்கள் உங்களது பணியின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். உங்களது பணியில் உங்களுக்கு மனநிறைவு கிடைக்கும் வண்ணம் நீங்கள் பணியாற்ற வேண்டும். அரசு பணிகளில் பணியாற்றும் அலுவலர்களையும் ஊக்கப்படுத்த வேண்டுமென்ற கடமை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் உள்ளது என்றார்.

அதனைத்தொடர்ந்து, அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு சிறந்த அரசு என்பதற்கு எடுத்துக்காட்டாக தான் இன்றைய நிகழ்ச்சியில் 9 நபர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இப்பணி ஆணை கடந்த அக்டோபர் மாதம் மரணமடைந்த வாரிசுதாரர்களுக்கும் பணி ஆணைகள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டுமென்பதற்காக பல மின்பணிகள் தொடங்குவதற்கான ஆணைகள் வழங்கிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், மின்சாரத் துறை அமைச்சர் அவர்களுக்கும், கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். நமது மாவட்டத்தை பொறுத்தவரை மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கின்றோம். எல்லா இடங்களிலும் மரங்கள் இருக்கிறது. 

எனவே சிறிது காற்று வீசினால்கூட மின்கம்பிகளில் உரசல் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது. அதை விரைந்து நிவர்த்தி செய்வதற்கான பணிகளில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. மேலும், நமது மாவட்டத்தில் புதிதாக 23 மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, தக்கலையில் 230 KV புதிய துணை நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே குலசேகரம், மயிலாடி பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விரைவில் நடைபெற உள்ளது. 

கருங்கல், இடைக்கோடு பொறுத்தவரை கூடுதல் மின்தேவை கேட்டதனடிப்படையில் தற்போது அதற்கான அனுமதி வழங்கப்பட்டு, பணிகள் தொடங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிள்ளியூர், இடைக்கோடு புதிய துணை நிலையம் அமைப்பதற்கான இடத்தேர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவடையும்போது நமது மாவட்டத்தில் மின் தட்டுப்பாடு முற்றிலும் இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, வடக்கிழக்கு பருவ மழையின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்மாற்றிகள் மற்றும் தேவையான மின்கம்பங்கள் உள்ளிட்டவைகள் தயார் நிலையில் இருக்கிறது என்றார். 

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவப்பிரியா, திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளர் பொறி. செல்வகுமார், கன்னியாகுமரி மாவட்ட மின்பகிர்மான மேற்பார்வை பொறியளாளர் குருவம்மாள், செயற்பொறியாளர் (விநியோகம்) ராஜசேகர், வழக்கறிஞர்கள் மகேஷ், சதாசிவம் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory