» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அதிமுகவில் இருந்து உண்மை தொண்டர்கள் யாரும் வெளியேறவில்லை: எஸ்.பி.சண்முகநாதன்

புதன் 13, அக்டோபர் 2021 8:33:11 AM (IST)



அதிமுகவில் இருந்து உண்மை தொண்டர்கள் யாரும் வெளியேறவில்லை, பதவி, பணத்தை அனுபவித்தவர்கள் மட்டும் தான் வெளியே சென்றுள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசினார்.

அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடுவது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி பானுபிருந்தாவன் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை வகித்து பேசுகையில், தமிழகத்தில் ஆட்சி மாறியிருக்கிறது. ஆனால் இந்த ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அதிமுகவில் இருந்து உண்மையான கட்சி தொண்டர்கள் யாரும் வெளியே போகவில்லை. இதுவரை இங்கு இருந்து கொண்டு பதவி சுகம், பண சுகத்தை அனுபவித்தவர்கள் மட்டுமே வெளியேறி இருக்கிறார்கள். பதவி சுகத்திற்காக போனவர்களை பற்றி நாங்கள் கவலை கொள்ளவில்லை.
 
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்தபோதே கலைஞர் ஆட்சியில் தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடியது. இதனை தைரியமாக தட்டிக்கேட்டவர் தான் புரட்சித்தலைவர். அதோடு இந்த லஞ்ச லாவண்யத்தை ஒழித்து தமிழக மக்களை காப்பதற்காகவே அவர் அஇஅதிமுகவை தொடங்கினார். அவருக்கு எத்தனையோ இடையூறுகள் வந்தபோதும் கட்சியை சிறப்பாக நடத்தி ஆட்சியை பிடித்து தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தினார். அவரது வழியில் மறைந்த நமது அம்மாவும் எத்தனையோ இடர்பாடுகளையும் சந்தித்து தைரியமாக எதிர்கொண்டு புரட்சித்தலைவர் வழியில் பொற்கால ஆட்சியை நடத்தி மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளார்.

அம்மாவின் மறைவிற்கு பிறகு மக்கள் எடப்பாடி அவர்களை ஏற்றுக்கொண்டார்கள். நாம் நடந்து முடித்த சட்டமன்ற தேர்தலில் குறைந்த வாக்குகள் சதவீதத்தில் தான் தோல்வியை தழுவியுள்ளோம். மொத்த வாக்குகளில் திமுக 37சதவீதம் பெற்றுள்ளதில் நாம் 33.50சதவீதம் பெற்றுள்ளோம். சில தொகுதிகளில் பாஜக, பாமக என கூட்டணி கட்சிகள் சரியான தகுதியான வேட்பாளர்களை நிறுத்தாத காரணத்தினால் தான் அந்த தொகுதிகளில் நாம் மிக குறைந்த அளவிலான வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தோம். 

இதன்மூலம் எதிரணியின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. அதுவும் நம்மோடு சில துரோகிகள் இருந்ததால் தான் நாம் தோல்வியை தழுவியுள்ளோம். தோற்றாலும் நாம் துவண்டு போகவில்லை. அம்மாவின் வழியில் அதிமுக இயக்கமானது ராணுவ போன்ற கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருகிறது. 50வது ஆண்டு பொன்விழாவை நாம் மிக சிறப்பாக கொண்டாடவேண்டும். என்றார். 

கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல் முன்னிலை வகித்தார். மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட இணைச்செயலாளர் செரினாபாக்கியராஜ், முன்னாள் வாரிய தலைவர் அமிர்தகணேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட ஜெ.பேரவை இணைச்செயலாளர் ஞானபிரகாசம், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, துணை செயலாளர் வலசைவெயிலுமுத்து, மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்ராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைசெயலாளர் சத்யாலட்சுமணன், மாவட்ட வர்த்தகரணி செயலாளர் பண்டாரவிளை பாஸ்கரன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் எம்.ஜிஆர் தொடங்கிய அதிமுகவை ஜெயலலிதா வளர்த்தெடுத்து தற்போது கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்ட மன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடிபழனிச்சாமி, கழக ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர். அவர்களது ஆலோசனையின்படி அதிமுகவின் 50வது ஆண்டு பொன் விழாவை தூத்துக்குடி தெற்கு மாவட்டத்yதில் நகரம் முதல்t கிராமங்கள் வரை என அனைத்துப்பகுதிகளிலும் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன


மக்கள் கருத்து

ராமநாதபூபதிOct 13, 2021 - 12:12:20 PM | Posted IP 108.1*****

எம் ஜி யார் திமுகவில் இருந்தபோதே கலைஞர் ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்து ஆடியது. அப்போ 2014இல் உங்க அம்மா உள்ளேபோனது மக்களுக்காக போராடியதற்கா? ஊழல் சாம்ராஜ்யத்தை கட்டமைத்ததே அதிமுக தானே. திமுகவில் பொருளாளராகிய என்னிடம் கணக்கு காட்டவில்லை என்று வெளியேறிய எம் ஜி யார் சாகும்வரை அதிமுகவில் கணக்கு காட்டவில்லை என்பதே உண்மை. அதிமுக அமைச்சர்களிடமும் கணக்கு கேட்கவில்லை. கேட்டிருந்தால் உங்க அம்மா ஒரு வேலை உள்ளே போகாமல் இருந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory