» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி கடற்கரையில் சமுத்திர தீர்த்த ஆரத்தி: கரோனா விதிகளை மீறியதாக 300 பேர் மீது வழக்கு

செவ்வாய் 21, செப்டம்பர் 2021 12:44:31 PM (IST)கன்னியாகுமரி கடற்கரையில் கரோனா விதிகளை மீறி சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றதாக 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புரட்டாசி மாத பெளர்ணமி தினத்தையொட்டி குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை நடத்தும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நேற்று மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்தது. நிகழ்ச்சிக்கு வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ் தலைமை தாங்கினார்.
 
இந்த நிகழ்ச்சியில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், நாகப்பட்டினம் திருப்புகலூர் திருமடம் வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் 293வது குருமகா சன்னிதானம் சிவ ஞான பானு ஸ்ரீலஸ்ரீ ஹரி ஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டு முக்கடல் சங்கம மகா சமுத்திர தீர்த்த ஆரத்தியை தொடங்கி வைத்தனர்.

பின்னர் மகா சமுத்திர தீர்த்தத் திருவிழா மலரை வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத்தைச்சேர்ந்த ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியையொட்டி கன்னியாகுமரியில் நேற்று நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நேற்று காலை வரை கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தொடர் முயற்சியின் பேரில் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்களுடன் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டன. போலீசார் குவிக்கப்பட்டு கடற்கரைக்கு செல்லும் பக்தர்களை திருப்பி அனுப்பினர். நேரம் செல்லச்செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். லேசான தள்ளுமுள்ளு நடந்தது. இதனை தொடர்ந்து போலீசாரின் தடையை மீறி பக்தர்கள் கடற்கரைக்கு சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ, பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம் அய்யப்ப சேவா சங்க மாவட்டஅமைப்பாளர் நாஞ்சில் ராஜன், விசுவ இந்து பரி‌ஷத் மாநில தலைவர் குழைக்காதர், மாநில இணைச் செயலாளர் காளியப்பன், மாவட்ட செயலாளர் கார்த்திக், ஓருங்கிணைப்பாளர் கனகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கொரோனா விதிமுறையை மீறியதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்து திருத்தொண்டர் பேரவை தலைவர் ராஜகோபால் உள்பட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory