» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கைக்குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி? 4 பேர் காவல்நிலையத்தில் ஒப்படைப்பு

செவ்வாய் 14, செப்டம்பர் 2021 3:25:34 PM (IST)

ஆழ்வார்குறிச்சி அருகே வனப்பகுதியில் குழந்தையை நரபலி கொடுக்க முயன்றதாக சாமியார், 3 பெண்களை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ளது கடனாநதி அணை. இந்த அணைக்குச் செல்ல பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு 24 மணி நேரமும் காவல் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் நவீன சொகுசு கார் அணைக்குச் சென்றுள்ளது. அதைப் பார்த்த அந்தப் பகுதியில் வயல் காவலுக்கு இருந்த சிலர் பின்தொடர்ந்து சென்று பார்த்த போது காவி உடையணிந்த முதியவர், இரண்டு சிறுமிகள், கைக்குழந்தையுடன் ஓர் இளம்பெண் மற்றும் ஓர் ஆண் இருந்ததையும்  கைக்குழந்தையை தலைகீழாகத் தூக்கிப் பிடித்தபடி காவி உடையணிந்த முதியவர் ஊதுபத்திக் காட்டிக் கொண்டிருந்ததையும் பார்த்துள்ளனர். 

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள் குழந்தையை நரபலி கொடுக்க முயல்வதாக நினைத்து ஆழ்வார்குறிச்சி காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். மேலும் இதுகுறித்தத் தகவலறிந்த அருகிலுள்ள கிராம மக்களும் திரண்டனர். அங்கு வந்த காவலர்கள், முதியவர், சிறுமிகள் மற்றும் பெண்ணை அழைத்துச் செல்ல முயன்றபோது, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோருக்கு அனுமதி இல்லாத நிலையில் சாமியார் எப்படி அணைக்கு வந்தார், அதிகாரிகள் துணையுடன் குழந்தையை நரபலி கொடுக்க முயன்றுள்ளார் என்று கூறி அழைத்துச் செல்லவிடாமல் தடுத்துள்ளனர். அவர்களை சமாதானப்படுத்திய காவலர்கள், 5 பேரையும் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் சிவகாசியைச் சேர்ந்தவர்கள் என்றும் முதியவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வனப்பகுதியில் உள்ள அத்ரி கோயிலுக்கு வந்து செல்வதாகவும், நேற்றும் அத்ரி கோயிலில் வழிபட வந்த நிலையில் இரவு நேரமானதால் அணைப்பகுதியில் இருந்து வழிபட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஓட்டுநரைத் தவிர மற்றவர்களை காவலர்கள் அனுப்பி வைத்தனர். காரையும் காவல் நிலையத்தில் நிறுத்திவைத்தனர். இரவு நேரத்தில் குழந்தையை நரபலி கொடுப்பதாக சாமியர் உள்பட 5 பேரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நடுக்கடலில் படகு கவிழ்ந்து 23 மீனவர்கள் காயம்

வியாழன் 23, செப்டம்பர் 2021 11:37:13 AM (IST)

Sponsored AdsThoothukudi Business Directory