» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் புதிய நகர பேருந்து சேவை: அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்பி துவக்கி வைத்தனர்!

சனி 31, ஜூலை 2021 12:40:06 PM (IST)



தூத்துக்குடியில் புதிய சாதாரண கட்டண நகர வழித்தட பேருந்துகளை அமைச்சர் பெ.கீதாஜீவன் முன்னிலையில் கனிமொழி எம்பி  துவக்கி வைத்து நகர பேருந்தில் பயணம் செய்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி தற்காலிக பேருந்து நிலையத்தில் புதிய சாதாரண கட்டண நகர வழித்தட பேருந்துகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்  தலைமையில் இன்று (31.07.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு புதிய வழித்தட நகர பேருந்தினை துவக்கி வைத்து நகர பேருந்தில் மில்லர்புரம் வரை பயணம் செய்தார். இந்நிகழ்ச்சியில் சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி - தாளமுத்துநகர் (சிலுவைபட்டி) (வழி: 4வது கேட், அரசு மருத்துவமனை, பழைய பேருந்து நிலையம், தந்தி ஆபீஸ், திரேஸ்புரம், முருகன் தியேட்டர்) என ஒரு மார்க்கமாகவும், தாளமுத்துநகர் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வழி: முருகன் தியேட்டர், திரேஸ்புரம், மட்டக்கடை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், தாலுகா ஆபிஸ், அரசு மருத்துவமனை, 3வது மைல்) என ஒரு மார்க்கமாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - முள்ளக்காடு (வழி: மில்லர்புரம், அரசு மருத்துவமனை, பழைய பேருந்து நிலையம், உதவி ஆட்சியர் அலுவலகம், பீச் ரோடு, கேம்ப் 1, துறைமுக குடியிருப்பு, கேம்ப் 2, முத்தையாபுரம் பல்க், ஸ்பிக்நகர்) என ஒரு மார்க்கமாகவும் என 3 புதிய சாதாரண கட்டண நகர வழி தட பேருந்துகளை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் எம்பி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள மனுக்களுக்கு தனி துறையை அமைத்து விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளார். விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தூத்துக்குடி நகர பகுதியில் இயங்கி வந்த பல்வேறு பேருந்துகள் கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய வழித்தட நகர பேருந்துகளை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்ய இலவசம். இப்பேருந்துகளை பெண்கள் அதிக அளவில் பயன்படுத்துவார்கள் என தெரிவித்தார்.



தொடர்ந்து தூத்துக்குடி மில்லர்புரம் டி.எம்.பி. காலனி பகுதியில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினை கனிமொழி எம்.பிதிறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து முத்துநகர் கடற்கரை பகுதியில் மாநகராட்சியின் மூலம் 5000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி மண்டல மேலாண்மை இயக்குநர் ராஜேஸ்வரன், பொது மேலாளர் சரவணன், துணை பொது மேலாளர் சசிகுமார், தூத்துக்குடி கிளை மேலாளர் பாஸ்கரன், மாநகராட்சி தலைமை பொறியாளர் சேர்மக்கனி, முக்கிய பிரமுகர்கள் ஆனந்தசேகரன், ஜெகன்பெரியசாமி, மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.வித்யா, உதவி செயற்பொறியாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

tamilanJul 31, 2021 - 01:23:43 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள் . மேலும் கீழுர் ரயில் நிலையத்திற்கு பேருந்து சேவை மிக மிக குறைவு. ஆட்டோக்களுக்கு வாடகை மிக மிக அதிகம். மேலும் முதல் கேட் , மற்றும் இரண்டாம் கேட் பகுதிக்கும் பேருந்து சேவை குறைவு மேலும் இந்த பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோ சேவைகளுக்கு அனுமதி கொடுக்கலாம் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory