» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் 68.80 சதவீதம் வாக்குப்பதிவு

புதன் 7, ஏப்ரல் 2021 9:02:55 AM (IST)

குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில் 68.80 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது. ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

தமிழக சட்டசபைக்கான பொதுத் தேர்தல் நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. இதேபோல் குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள், அ.‌ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிய கூட்டணி வேட்பாளர்கள் என மொத்தம் 81 பேர் களம் இறங்கியுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் மொத்தம் 15 லட்சத்து 71 ஆயிரத்து 651 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டம் முழுவதும் 2,243 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்குச்சாவடிகள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதற்றமான மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்குச்சாவடிகளில் சட்டமன்ற தேர்தலுக்கு தனியாக வாக்குப்பதிவு எந்திரமும், நாடாளுமன்ற தேர்தலுக்கு தனியாக வாக்குப்பதிவு எந்திரமும் வைக்கப்பட்டிருந்தது. 

கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டன. அதன்படி வாக்களிக்க வந்த வாக்காளர்கள் ஒவ்வொருவரும் வாக்குச்சாவடிக்கு வெளியில் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கைகளை சுத்தம் செய்ய வாக்காளர்களுக்கு கிருமிநாசினி திரவம் வழங்கப்பட்டது. அதன் பிறகு வாக்காளர்கள் வலது கையில் அணிந்து கொள்ளும் வகையில் கையுறையும் வழங்கப்பட்டன. அதன் பிறகு வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று காலையில் இருந்து மதியம் வரை மாவட்டத்தின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆண்களும், பெண்களுமாக வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்ததை காண முடிந்தது. அதிக வெயில் காரணமாக மதியத்துக்கு பிறகு வாக்குப்பதிவு சிறிது மந்தமாக காணப்பட்டது. வெயில் குறைந்ததும் மாலையில் மீண்டும் வாக்காளர்களின் கூட்டம் வாக்குச்சாவடிகளில் அதிகமாக இருந்ததை காண முடிந்தது. நேற்று காலை 7 மணி முதல் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பதிவான வாக்குகளின் சதவீதம் தொகுதி வாரியாக வருமாறு:-

கன்னியாகுமரி

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் நேற்று காலை 7 மணியில் இருந்து 9 மணி வரையிலான 2 மணி நேரத்தில் 9.3 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 18.8 சதவீதமும், 1 மணி நிலவரப்படி 32.2 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 52.56 சதவீதமும் பதிவாகியிருந்தது.

நாகர்கோவில்

நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் 9 மணி வரையிலான 2 மணி நேரத்தில் 10.58 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 20.25 சதவீதமும், 1 மணி நிலவரப்படி 36.58 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 55.43 சதவீதமும் இருந்தது.

குளச்சல்

குளச்சல் சட்டமன்ற தொகுதி 9 மணி வரை 9 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 17.53 சதவீதமும், 1 மணி நிலவரப்படி 31.63 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 48.2 சதவீதமும் பதிவாகியிருந்தது.

பத்மநாபபுரம்

பத்மநாபபுரம் சட்டசபை தொகுதியில் 9 மணி வரை 8.74 சதவீதமும், 11 மணி வரை 18.56 சதவீதமும், 1 மணி நிலவரப்படி 33.42 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 50.91 சதவீதமும் பதிவாகி இருந்தது.

விளவங்கோடு

விளவங்கோடு சட்டசபை தொகுதியில் காலை 9 மணி வரை 9.18 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 18.9 சதவீதமும், 1 மணி நிலவரப்படி 32.48 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 49.54 சதவீதமும் பதிவாகி இருந்தது.

கிள்ளியூர்

கிள்ளியூர் சட்டசபை தொகுதியில் காலை 9 மணி வரை 10.18 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 19.84 சதவீதமும், 1 மணி நிலவரப்படி 36.57 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 49.12 சதவீதமும் பதிவாகி இருந்தது.

குமரி மாவட்ட 6 தொகுதிகளிலும் சராசரியாக 51.16 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுவது வழக்கம். ஆனால் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 12 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

68.80 சதவீதம் வாக்குப்பதிவு

குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் 68.80 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்கு சதவீதம் வருமாறு:-

கன்னியாகுமரி - 75.34 சதவீதம்

நாகர்கோவில் - 66.64 சதவீதம்

குளச்சல் - 67.45 சதவீதம்

பத்மநாபபுரம் - 69.82 சதவீதம்

விளவங்கோடு - 66.90 சதவீதம்

கிள்ளியூர் - 65.85 சதவீதம்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:10:08 AM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory