» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிரதமர் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

வெள்ளி 2, ஏப்ரல் 2021 10:56:26 AM (IST)

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை பொதுத்தேர்தலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலும் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தமிழகத்தில் முதல் கட்ட பிரசாரத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து 2-வது கட்டமாக இன்று (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரி அருகில் உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.

இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இன்று மதியம் 2 மணி அளவில் வந்திறங்குகிறார். அவரை மத்திய மந்திரிகள் கிஷன்ரெட்டி, வி.கே.சிங், பா.ஜனதா அகில இந்திய பொதுச் செயலாளர் சி.டி.ரவி மற்றும் தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்கிறார்கள்.

அதன் பிறகு அவர் அங்கிருந்து கார் மூலம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரசார பொதுக்கூட்ட மேடையை வந்தடைகிறார். பின்னர் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.

இதையொட்டி கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வந்திறங்கும் அரசு விருந்தினர் மாளிகை ஹெலிபேடு, அங்கிருந்து அவர் அகஸ்தீஸ்வரத்துக்கு சென்று, வரும் பாதைகள், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி ஆகியவற்றில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணிக்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 5 ஆயிரம் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பாதுகாப்பு பணி ஏற்பாடுகளை கூடுதல் டி.ஜி.பி. ஆபாஷ்குமார், போலீஸ் ஐ.ஜி. முருகன், டி.ஐ.ஜி.க்கள் பிரவீன்குமார் அபிநபு (நெல்லை), ஜெயகவுரி உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகிறார்கள். தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி நேற்று குமரி வந்தார். பின்னர் அவர் பிரதமர் வந்திறங்கும் ஹெலிபேடு, அவர் கல்லூரிக்குச் செல்லும் பாதை, விவேகானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரசார பொதுக்கூட்ட மேடை ஆகியவற்றையும், அவற்றில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்வையிட்டு போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனையும் வழங்கினார்.

விவேகானந்தா கல்லூரியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்துக்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் கூறினார். பிரதமரின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பா.ஜனதா மாவட்ட தலைவர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் நேற்று நாகர்கோவிலில் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:10:08 AM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory