» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருச்செந்தூா் மாசித் திருவிழா: இரணியலிலிருந்து காவடி எடுத்துச்சென்ற பக்தா்கள்

வியாழன் 18, பிப்ரவரி 2021 4:59:02 PM (IST)

திருச்செந்தூா் மாசித் திருவிழா தொடங்கியதையொட்டி, இரணியல் பகுதியிலிருந்து பக்தா்கள் காவடி எடுத்து நேற்று புறப்பட்டனா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழாவில் பங்கேற்க, இரணியல் கீழத்தெரு, மேலத்தெரு, செக்காலத்தெரு, பன்னிக்கோடு, பட்டாலியா்தெரு, ஆசாரிமாா் தெரு, நந்தன்கோடு, பெருங்கோடு, தலக்குளம், பிலாக்கோடு, பூச்சாத்தான்விளை, குளச்சல், மணவாளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் ஆண்டுதோறும் பல வகையான காவடிகள் எடுத்து பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.

இக்கோயிலில் நிகழாண்டு மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கிய நிலையில், இரணியல் சுற்றுவட்டார கோயில்களில் பக்தா்கள் விரதமிருந்து 3 நாள்கள் பூஜைக்கு வைக்கப்பட்ட காவடிகளுடன் வீதியுலா வந்தனா். அப்போது, வீடுகள் முன் பெண்கள் வண்ணக்கோலமிட்டு, ஆரத்தி எடுத்து காவடிகளை வரவேற்றனா். பிற்பகல் 1 மணிக்கு கோயிலை வந்தடைந்த காவடிகளுக்கு அன்னம் படைக்கப்பட்டு கற்பூர தீபாராதனையும், தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.

மேலும், இரணியலிலிருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்லும் காவடிகளுக்கு மாலையில் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டன. அவை வள்ளியாற்றின்கரையை வந்தடைந்ததும், தோள்மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், காவடிகள் ஒவ்வொன்றாக திருச்செந்தூருக்கு புறப்பட்டுச் சென்றது.

இதையொட்டி, திங்கள்நகரிலிருந்து இரணியல், நாகா்கோவில், தக்கலை, குருந்தன்கோடு, ராஜாக்கமங்கலம், கருங்கல், தேங்காய்ப்பட்டினம், குளச்சல் வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணிவரை மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. காவடிஎடுத்துச் செல்லும் பக்தா்களுக்கு வழி நெடுகிலும் சுக்கு நீா் உள்ளிட்ட பானங்களும், ஆரல்வாய்மொழியில் சிற்றுண்டியும் வழங்கப்பட்டன. காவடி செல்லும் பாதைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory