» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை: நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவு

செவ்வாய் 12, ஜனவரி 2021 5:43:23 PM (IST)

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கொசுக்களால் பரவும் நோய்களான, மலேரியா, டெங்கு,போன்ற நோய்களும், தண்ணீரால் பரவும் நோய்களான மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்டஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

நோய் தடுப்பு மருந்துகள் போதுமான அளவு இருப்பில் வைக்கவும், கொசு ஒழிப்பு பணிக்கு தேவையான அனைத்து மருந்துகளும், அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவு இருப்பில் வைக்கவும்,கிருமி நாசினிகள் மற்றும் தொற்று நீக்க மருந்துகள் உள்ளாட்சி துறை அலுவலகங்களில் இருப்பில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

கிராம பஞ்சாயத்துகள், நகர பஞ்சாயத்துகள், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம் மூலம் வழங்கப்படும் குடிநீர் ஆதாரங்களில் குளோரின் அளவு தினமும் சோதிக்கப்பட்டு பஞ்சாயத்துகளில் உடனுக்குடன் குளோரின் அளவு சமன் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார ஆய்வாளர்களின் தீவிர கண்காணிப்பில் நீர்நிலை ஆதாரங்கள் உள்ளன.

அரசு மற்றும் 153 தனியார் மருத்துவமனைகளில் உள்ள காய்ச்சல் உள்நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகளின் தகவல் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட கிராமங்களில் தடுப்பு நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசுஒழிப்பு நடவடிக்கைக்காக ஊராட்சிகளுக்கான ஒன்றியத்தில் 190 பணியாளர்களும் பேரூராட்சிகளின் சார்பாக 554 பணியாளர்களும் நகராட்சிகளில் 53 பணியாளர்களும் மாநகராட்சியில் 298 தேசியசுகாதார இயக்கம் சார்பாக10 பணியாளர்களும் ஆக மொத்தம் 1105 பணியாளர்களை அமர்த்தி டெங்குநோய் தடுப்புபணிகளை மேற்கொள்ளமாவட்டஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

களப்பணி மேற்பார்வையாளர்களாக சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார ஆய்வாளர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் நியமிக்கவும்,. வட்டார அளவிலான மேற்பார்வையாளர்களாக வருவாய் ஆய்வாளர்களை நியமிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மாவட்டம் முழுவதிலும் உள்ள 9 வட்டாரங்களும் 3 மண்டலமாக பிரிக்கப்பட்டு, இளநிலை பூச்சியில் வல்லுநர் குழுக்கள் மூலம் கொசுப்புழுக்களின் அடர்த்தி மற்றும் தற்காலிக பணியாளர்களின் பணிகள் குறுக்காய்வு செய்யப்படுகிறது.

தேவைக்கேற்ப முதிர் கொசுக்களின் அடர்த்தி அதிகரிக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு புகை மருந்து அடிகக உத்தரவிட்டுள்ளார். மழைநீர் சூழும் பகுதிகள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் நடத்த உத்தரவிட்டுள்ளார். இக்குழுவில் மருத்துவ அலுவலர், செவிலியர், மருந்தாளுநர் இருப்பபார்.. முகாம் நடைபெறும் இடங்களில் பேரிடர் விழிப்புணர்வு கொசு மற்றும் தண்ணீரால் பரவும் நோய்கள் குறித்த தகவல்கள் அடங்கிய பதாகைகள் பார்வைக்கு வைக்கவும், நலக்கல்வி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்

அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம், நிலவேம்பு கசாயம் வழங்குதல், விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவை இன்னும் முனைப்போடு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது மக்கள் தங்கள் வீட்டைச் சுற்றிலும் உள்ள உபயோகமற்ற பொருட்கள் மற்றும் திடக்கழிவுகளை அகற்றி மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்வதோடு ரப்பர் தோட்டங்களில் உள்ள சிரட்டைகளை தேவையில்லாத போது கவிழ்த்து வைத்து கொசுப்புழு உற்பத்தியை தடுக்க வேண்டும்.

காய்ச்சல் கண்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிட்சை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

தண்ணீர் மற்றும் பூச்சிகளால் பரவும் தொற்று நோய்களைத் தடுக்க பொதுமக்கள் கீழ்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப் படுகிறார்கள் :

பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்

கொதிக்க வைத்த தண்ணீரை அருந்துதல் நலம்

தொற்றுநோய் வராமல் தடுக்க, சோப்பு போட்டு அடிக்கடி கைகளை நீரினால் கழுவ வேண்டும்

வெள்ள நீரில் நனைந்த உணவுப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.

எவருக்கேனும் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவ முகாம்கள் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஈக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க குப்பை மற்றும் அழுகிய பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும்

கொசு உற்பத்தியைத் தடுக்க கட்டுமான இடங்களில் தேங்கும் தண்ணீர் மற்றும் மழைநீர் தேங்கும் வகையில் உள்ள தேவையற்றப் பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory