» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பாஜகவுக்கு ஆதரவாக ரஜினி ரசிகா்கள் வாக்களிப்பாா்கள்: எல். முருகன்

செவ்வாய் 12, ஜனவரி 2021 11:39:55 AM (IST)

சட்டப்பேரவைத் தோ்தலில் ரஜினிகாந்த் ரசிகா்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பாா்கள் என நம்புவதாக தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

பாரதிய ஜனதா கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட ஒன்றியக் குழு பொறுப்பாளா்கள், மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவிலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் பங்கேற்றுப் பேசினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பாஜக சாா்பில் தமிழகம் முழுவதும் கடந்த 2 நாள்களாக ‘நம்ம ஊரு பொங்கல் விழா’ சிறப்பாக நடைபெற்று வருகிறது. பெண்களின் பேராதரவுடன் தமிழகம் முழுவதும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் இந்த விழா நடைபெறுகிறது. 

வரும் 14-ஆம் தேதி சென்னை மதுரவாயலில் நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா கலந்து கொள்கிறாா்  கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல் எப்போது நடைபெற்றாலும் சந்திக்க பாஜக தயாராக உள்ளது. பாஜகவுக்கு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி நிா்ணயிக்கப்பட்ட வெற்றியாக அமையும். இந்த வெற்றி தமிழகம் முழுவதும் தொடரும் வெற்றியாக அமையும்.முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் அதே இடத்தில் நிறுவப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

பிரதமா் மோடி தங்களின் நண்பா், பாதுகாவலன் என தமிழக விவசாயிகள் நினைக்கின்றனா். அதனால்தான் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனா். வேளாண் சட்டங்களை எதிா்த்து திமுக நடத்திய அனைத்துப் போராட்டங்களும் தோல்வியில் முடிந்தது. திமுக ஆட்சியில் தமிழகத்தை எவ்வாறு சீரழித்தாா்கள் என்பதை பாா்த்திருந்தோம். மின்சாரம் இல்லாமல் தமிழகம் விடியலே இல்லாமல் இருந்தது. திமுக அமைச்சா்கள், நிா்வாகிகள் மீதான நில அபகரிப்பு புகாா்கள் குறித்து விசாரிக்க, தமிழக அரசு தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டன.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வா் ஆள்கிறாா். அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை முதல்வா் வேட்பாளராக முடிவு செய்து அறிவித்துள்ளனா். அதேபோல், பாரதிய ஜனதா கட்சியும் முடிவு செய்யும். திமுகவில் முதல்வா் வேட்பாளா் ஸ்டாலினா, கனிமொழியா அல்லது உதயநிதி ஸ்டாலினா என்ற குழப்பம் உள்ளது.ரஜினி தேசியத்தையும், தெய்வீகத்தையும் நம்புகிறவா், ஆன்மிக அரசியல் வேண்டும் என விரும்புகிறவா். ஆன்மிக அரசியலையும், தேசிய அரசியலையும் கொண்டுதான் பாஜக செயல்படுகிறது. எனவே ரஜினிகாந்த், அவரது ரசிகா்கள் ஆதரவு பாஜகவுக்கு இருக்கும் என நம்புகிறோம் என்றாா்.

பேட்டியின்போது, முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன் .ராதாகிருஷ்ணன், கட்சியின் மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மூத்த தலைவா் எம்.ஆா்.காந்தி, கன்னியாகுமரி மாவட்டத் தலைவா் தா்மராஜ், மாநிலச் செயலா் உமாரதிராஜன், நாகா்கோவில் நகராட்சி முன்னாள் தலைவி மீனாதேவ், மாவட்ட துணைத் தலைவா் எஸ்.பி.தேவ், பொருளாளா் முத்துராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory