» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சி.எஸ்.ஐ. அலுவலக ஊழியர் வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை

செவ்வாய் 24, நவம்பர் 2020 12:22:42 PM (IST)

தக்கலை அருகே  சி.எஸ்.ஐ. அலுவலக ஊழியர் வீட்டில் 70 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே இலஞ்சவிளை பகுதியை சேர்ந்தவர் வின்ஸ் ஸ்டீபன் (60). நாகர்கோவிலில் உள்ள சி.எஸ்.ஐ. அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சென்று விட்டார். நேற்று மாலையில் வீடு திரும்பினார். அப்போது அவரது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த நகை, பணம் கொள்ளை போய் இருந்தது. துணிமணிகள் மற்றும் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த துணிகர கைவரிசையை காட்டியுள்ளனர்.

இரவு நேரத்தில் வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே புகுந்த அவர்கள், ஒவ்வொரு அறையாக சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள ஒரு அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 70 பவுன் நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி உள்ளனர். இந்த துணிகர கொள்ளை குறித்து வின்ஸ் ஸ்டீபன் தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே டிஎஸ்பி ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு, ஜன்னல் கம்பியை வளைத்து கைவரிசை காட்டியதால், பிரபல கொள்ளையர்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்பநாய் மூலமும் விசாரணை நடத்தப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமரா இருந்தது. இதன் மூலம் ஏதாவது துப்பு கிடைக்கும் என போலீசார் ஆய்வு செய்தனர். 

ஆனால் அங்கு எந்தவொரு காட்சியும் பதிவாகவில்லை. அதாவது, காட்சி பதிவாகும் ஹார்டு டிஸ்க்கை கொள்ளையர்கள் தூக்கி சென்றுள்ளனர். தங்கள் பற்றிய எந்தவொரு ஆதாரத்தையும் விட்டு வைக்காமல் செல்ல வேண்டும் என்ற நோக்கில் கொள்ளையர்கள், கவனமாக இருந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர். ஜன்னல் கம்பியை வளைத்து 70 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.26 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory