» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கேரளத்தில் கரோனா பரவுவதால் குமரி மக்கள் விழிப்புடன் செயலாற்ற முதல்வர் அறிவுறுத்தல்

செவ்வாய் 10, நவம்பர் 2020 8:52:19 PM (IST)கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் மீண்டும் பரவி வரும் சூழ்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாம் விழிப்புடன் செயலாற்ற வேண்டும் என்று முதல்வர் கேட்டுக கொண்டார்.

மாண்புமிகு அம்மாவின் அரசு கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவாக இன்றைக்கு தமிழகம் முழுவதும் படிப்படியாக கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறைந்து இன்றைக்கு இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. முதற்கட்டமாக, வேளாண்மைத் தொழிலுக்கு முழுமையான விலக்கு அளிக்கப்பட்டு எவ்விதத் தடையுமில்லாமல் வேளாண் பணிகளை மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பை வழங்கி, அதன் விளைவாக வேளாண் பெருமக்கள் முழுமூச்சில் வேளாண் பணிகளை மேற்கொண்ட காரணத்தினால் தமிழகத்தில் நல்ல விளைச்சலைப் பெற்றுள்ளோம்.

தொழில் துறையைப் பொறுத்தவரை படிப்படியாக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றது. இன்றையதினம் 100 சதவிகித தொழிலாளர்களை வைத்து தொழிற்சாலைகளை இயக்கலாம் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டு பெரும்பாலான தொழிற்சாலைகள், குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தியை தொடங்கியுள்ளன. முழு அளவில் பணியாளர்களை வைத்து பல்வேறு தொழில்களும் இயங்கி வருகின்றன. மாண்புமிகு அம்மாவினுடைய அரசு சரியான முறையில் கவனம் செலுத்தி, பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளின் சரியான அணுகுமுறையின் காரணமாக இயல்பு நிலைக்கு தமிழ்நாடு திரும்பிக் கொண்டிருக்கிறது.

கரோனா வைரஸ் தடுப்பு பணி

கொரோனோ வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் ஆரம்பத்தில் சற்று அதிகமாக காணப்பட்டது. அதனைக் குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. தற்பொழுது, கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைக் குறைப்பதற்கு அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் நாளொன்றுக்கு 35 காய்ச்சல் முகாம்கள் வீதம் இதுவரை 3,166 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை 43,410 நபர்கள். இம்மாவட்டத்தில் நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 94 உள்ளன. இவ்வாறு காய்ச்சல் முகாம்கள் நடத்தி, அறிகுறி தென்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, பரிசோதனைக்கு உட்படுத்தி, சிகிச்சையளித்து குணமடைய செய்கிறார்கள். அதோடு, நடமாடும் மருத்துவக் குழுக்களும்,  அரசால் நியமிக்கப்பட்ட பணியாளர்களும் வீடு, வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து,  மக்களுக்கு பரிசோதனைகள் செய்து, அறிகுறி தென்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளித்து, குணமடையச் செய்கிறார்கள். இவ்வாறு பல்வேறு வகைகளில் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் இந்நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, குறைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனைகளும் தனியார் மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன, தேவையான படுக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன, தேவையான மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளன.

இவ்வாறு இந்நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு அனைத்து வழிகளிலும் அம்மாவினுடைய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் அருகில் உள்ளதால், கன்னியாகுமரிக்கும் திருவனந்தபுரத்திற்கும் பொதுமக்கள் அடிக்கடி சென்று வருகின்ற சூழ்நிலையுள்ளது. தற்போது திருவனந்தபுரத்தில் கொரோனோ வைரஸ் நோய்த் தொற்று அதிகமாகப் பரவி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, அங்கிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருபவர்களை மாவட்ட நிர்வாகம் சரியான முறையில் கண்காணித்து அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, நோய் அறிகுறி தென்பட்டால் சிகிச்சை அளிக்க வேண்டும்.

திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருபவர்களில் தொற்று ஏற்பட்டவர்கள் இருந்தால், இங்கும் நோய்த் தொற்றுப் பரவலுக்குக் காரணமாக அமைந்து விடும். அதனால், மாவட்ட நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

கன்னியாகுமரியிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பணிநிமித்தமாக பலர் செல்கிறார்கள். எனவே, இங்கு நோய்ப் பரவல் ஏற்பட்டுவிட்டால், தமிழ்நாடு முழுவதும் பரவி விடும். தற்பொழுது இந்நோய்ப் பரவல் குறைந்துள்ளது. எனவே, மீண்டும் பரவலுக்கு வழிவகுத்து விடாமல் மாவட்ட நிர்வாகம் கவனமாக செயல்பட வேண்டும். அண்டை மாநிலங்களுக்குச் சென்று வருபவர்களைக் கண்காணித்து, அவர்களை பரிசோதித்து, நோய் அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

குடிமராமத்து பணி

குடிமராமத்து திட்டம் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமான திட்டம்.  இந்த மாவட்டத்தை பொருத்தவரைக்கும் பிரதான தொழில்களான வேளாண் தொழில், மீன்பிடித் தொழில், உணவு பதப்படுத்துதல், கயிறு தயாரிக்கும் தொழில், இரப்பர் பதப்படுத்துகின்ற தொழில் விளங்கிக் கொண்டிருக்கின்றன.  இந்தத் தொழில்களை செய்பவர்களுக்கு அரசு முழுமையான உதவிகளை செய்து கொண்டிருக்கின்றது.

வேளாண் தொழில் சிறக்க தண்ணீரை முழுமையாக வேளாண் மக்களுக்கு தருவது அரசின் கடமை என்ற அடிப்படையில் பல ஆண்டுகாலமாக தூர்வாராத ஏரிகள் எல்லாம் இன்று விவசாய பெருமக்களின் உதவிகளோடு இன்றைக்கு தூர்வாரப்படுகின்ற நிகழ்ச்சியை பார்க்கின்றோம்.

இந்த மாவட்டத்தில் நல்ல மழைப்பொழிவு ஏற்பட்டிருக்கின்றது.  தூர்வாரிய காரணத்தினால் எல்லா ஏரிகளும் நிரம்பி இருக்கின்றன. அதேபோல தடுப்பணைகள் பல இடங்களில் கட்டிக்கொடுத்திருக்கின்றோம். தமிழ்நாட்டில் தடுப்பணைகள் கட்டுவதற்காக, 3 ஆண்டு காலத் திட்டமாக ரூபாய் 1,000 கோடி ஒதுக்கி, கன்னியாகுமரி மாவட்டத்திலும் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டியிருக்கின்றோம். இதுபோல வருங்காலத்திலும் பொழிகின்ற மழை நீரை அந்தத் தடுப்பணைகளில் சேமித்து நிலத்தடி நீர் உயர்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சிறு குறு தொழில்

அதோடு, இன்றைக்கு வேளாண் பெருமக்கள் மேன்மையடைய வேண்டுமென்பதற்காக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது. தென்னை மதிப்புக் கூட்டுதல் மையம் ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில்  அமைக்கப்பட்டு வருகிறது. கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ், ரூபாய் 10 கோடியே 15 இலட்சம் மதிப்பீட்டில் 678 பண்ணை இயந்திரங்கள் வாங்கி, 20,300 சிறு, குறு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதற்காக, இந்த ஆண்டு ரூபாய் 2 கோடியே 75 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தோவாளையில் வணிக வளாகம் ரூபாய் 6 கோடியே 20 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 2 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 7,911 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 கோடியே 45 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு சூரியசக்தி பம்பு செட்டுகளும், சூரியக் கூடார உலர்த்திகளும் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன. பண்ணைப் பணிகளை மேற்கொள்வதற்கு 113 விவசாயிகளுக்கு 113 வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல வகைகளிலும் விவசாய பெருமக்களின் வாழ்வாதாரம் சிறக்க வேண்டும் என்பதற்காக அரசு இப்படிப்பட்ட திட்டங்களை எல்லாம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

மீனவர் நலன்

மீன்பிடித் தொழில் இங்கு பிரதான தொழிலாக உள்ளது. மீனவர்களுக்குத் தேவையான உதவிகளை அம்மாவின் அரசு செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. புதிய தூண்டில் முறை, சூரை மீன் பிடிப்பு மற்றும் செவுள்வலை விசைப்படகுகளுக்கு  ரூபாய் 60 லட்சத்தில் 50 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் மானியமாக 16 பயனாளிகளுக்கு இந்த மாவட்டத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒகி புயலினால் பாதிக்கப்பட்ட 11 மீனவர்களுக்கு இத்திட்டத்தில் படகு கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள 100 மீனவர்களுக்கு 75 சதவிகித மானிய விலையில் செயற்கைக்கோள் தொலைபேசிகள் வழங்கப்பட்டுள்ளன. மீன்வளத் துறையில் 2020-ஆம் ஆண்டில் மீன்பிடி தடைகால நிவாரண நிதியாக ரூபாய் 5 ஆயிரம் வீதம் 27,517 நபர்களுக்கு இந்த மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுக் குடிநீர் திட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் ரூபாய் 76 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். அழகிய பாண்டியபுரம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். இரணியல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், இரணியல் பேரூராட்சி மற்றும் 319 கிராம குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ரூபாய் 174 கோடிக்கு மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது 71 சதவிகிதப் பணிகள் முடிவுற்றுள்ளன.

அனைத்துப் பணிகளையும் விரைவாக செயல்படுத்த வேண்டுமென்று உத்தரவிடப்பட்டு பணிகள் துரிதமாக குடிநீர் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிவுற்றவுடன் இந்தப் பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட நீர் வழங்கப்படும்.

நகராட்சி நலத்திட்டம்

நாகர்கோவில்  நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் ரூபாய் 251 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. தற்பொழுது 77 சதவிகிதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. குழித்துறை நகராட்சிக் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் ரூபாய் 31 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தபட்டு  ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்யப்பட்ட பின்பு பணிகள் ஆரம்பிக்கப்படும். இவைகளெல்லாம் மக்களுக்கு நிலையான, பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக  மாண்புமிகு அம்மாவின் அரசால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களாகும்.

மகளிர் சுயஉதவிக் குழு

புரட்சித் தலைவி அம்மா இருந்தபொழுது மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முன்னுரிமை அளித்தார்கள். பெண்கள் சுயமாகத் தொழில் தொடங்கி பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டுமென்று சுயஉதவிக் குழுக்களை ஏற்படுத்தி அதற்கு அதிகக் கடனுதவி வழங்கினார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6,564 குழுக்கள்  39,403 நபர்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. கடந்த மூன்றாண்டுகளில் இந்தக் குழுக்களுக்கு ரூபாய் 1,082.47 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், ரூபாய் 527 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 4,202 பயனாளிகளுக்கு ரூபாய் 210.37 கோடி வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் 6,590 உழைக்கும் மகளிருக்கு ரூபாய் 16.45 கோடி மானியத்தில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜல் ஜீவன் மிஷன்

"ஜல் ஜீவன் மிஷன்" திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் உள்ள இல்லங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 608 குக்கிராமங்களில் 63,680 வீடுகளுக்கு  இணைப்புகள் கொடுக்கப்படவுள்ளது.

பொதுப்பணித் துறை

பொதுப்பணித் துறையின் மூலம் அணைகளை புனரமைக்கும் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். தூண்டில் வளைவு அதிகமாக ஏற்படுத்த வேண்டுமென்ற மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று, அம்மாவின் அரசு, பூந்துறை, கோவளம், அழிக்கால், மேல்மிடாலம், இனையம் கிராமம், அகஸ்தீஸ்வரம் ஆகிய பகுதிகளில்  தூண்டில் வளைவுகள் அமைக்கப்படுகின்றன. தோவளை பெரியகுளத்தினை ரூபாய் 84 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி துவங்கப்படவுள்ளது. பொழிக்கரை கிராமத்தில் ரூபாய் 10.45 கோடி மதிப்பீட்டில் தொடர் தூண்டில் வளைவுகள் அமைக்கும் பணிக்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது.

கடலரிப்பைத் தடுக்க தடுப்புச்சுவர் அமைக்கும் திட்டம் அம்மாவினுடைய அரசால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கிள்ளியூர் வட்டம், அரையன்தோப்பில் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் கடலரிப்பு தடுப்புச் சுவர் திட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம்,  பொழிக்கரையில் தடுப்புச் சுவர் கட்டும் பணி அரசின் பரிசீலனையில் உள்ளது. அகஸ்தீஸ்வரம், பழையாற்றின்  குறுக்கே ரூபாய் 5.55 கோடி மதிப்பீட்டில்  தடுப்பணை  அமைக்கும் பணிக்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது.

கல்குளம் வட்டம், பாம்பூரி வாய்க்காலின் குறுக்கே ரூபாய் 2.60 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணிக்கான திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு பல இடங்களில் தடுப்பணைகள், தடுப்புச் சுவர்கள் அமைப்பது, தூண்டில் வளைவுகள் ஏற்படுத்துவது என அனைத்து வகைகளிலும் மக்களுக்குத் தேவையான நன்மைகளை மாண்புமிகு அம்மாவின் அரசு செய்து வருகிறது. அதோடு, புதிதாக கிள்ளியூர், திருவட்டாறு என இரண்டு வட்டங்கள் அம்மாவின் அரசால் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் 2019-20ஆம் ஆண்டில் மட்டும் 3,724 நபர்களுக்கு மாண்புமிகு அம்மாவின் அரசால் வழங்கப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 17,060 மனுக்களில் தகுதியான 3,719 நபர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. பட்டா மாறுதலுக்கான 1,15,230 விண்ணப்பங்களில் தகுதி வாய்ந்த 63,009 நபர்களுக்கு அதாவது 55 சதவிகிதம் அளவிற்கு பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் முகாம்களில் பெறப்பட்ட 46,277 மனுக்களில் 11,366 மனுக்கள் ஏற்கப்பட்டு அவைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன.

இவ்வாறு பல வகைகளிலும் மாண்புமிகு அம்மாவின் அரசு கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு நன்மைகளை செய்து வருகிறது. ஏற்கனவே அம்மா அவர்கள் அறிவித்த திட்டங்களை, அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகும் அம்மாவின் அரசு தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கன்னியாகுமரியில் ஆய்வு கூட்டத்தில் உரையாற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:10:08 AM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory