» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி இமெயில் : சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

செவ்வாய் 20, அக்டோபர் 2020 8:46:32 AM (IST)

குமரி மாவட்ட ஆட்சியர் பெயரில் இமெயில் முகவரி உருவாக்கி உள்ளதாக போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக குறைதீர்க்கும் நாள் முகாம் கடந்த சில மாதங்களாக நடத்தப்படவில்லை. பின்னர் தங்களது குறைகள், கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் ஆன்லைன் மூலம் குறைகள் மற்றும் கோரிக்கை தொடர்பான மனுக்களை ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ஆட்சியரின் பெயரில் போலி இ-மெயில் முகவரி ஒன்றை தொடங்கி, அதன் மூலம் ஆட்சியருக்கு குறைகள் மற்றும் கோரிக்கை மனு அனுப்பியவர்களிடம் சிலர் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து ஆட்சியர் பிரசாந்த் வடநேரே சார்பில் ஆட்சியரின் முகாம் அலுவலக அதிகாரிகள் ஆன்லைன் மூலம் நேசமணிநகர் போலீசாருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். அதுதொடர்பாக நேசமணிநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த புகார் மனு சைபர் கிரைம் போலீசாருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் போலி இ-மெயில் முகவரி எந்த செல்போன் எண்ணில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது? அந்த செல்போன் எண்ணின் உரிமையாளர் யார்? அவர் போலி இ-மெயில் முகவரி மூலம் யார், யாரை தொடர்பு கொண்டுள்ளார்? என்பது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். சைபர் கிரைம் போலீசார் கொடுக்கும் தகவலை கொண்டு நேசமணிநகர் போலீசார் போலியான இ-மெயில் தொடங்கிய நபரை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. ஆட்சியர் பெயரிலேயே போலி இ-மெயில் முகவரி உருவாக்கிய சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory