» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

களியக்காவிளையில் குமரியில் இருந்து சென்ற சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு

வெள்ளி 16, அக்டோபர் 2020 5:43:35 PM (IST)

குமரியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சென்ற சாமி சிலைகளுக்கு களியக்காவிளையில் போலீஸ் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு சாமி சிலைகள் கேரள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், தேவாரக்கட்டு சரஸ்வதி, வேளிமலை முருகன் ஆகிய சாமி சிலைகள் குமரி மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு செல்வது வழக்கம். கரோனா பரவி உள்ளதால், அதை தடுக்கும் விதமாக சாமிசிலைகளை கொண்டு செல்வதில் தமிழக-கேரள அரசு சில மாற்றங்களை செய்து இருந்தது. அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து வழக்கம் போல் பாரம்பரிய முறைப்படி சாமி ஊர்வலத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆண்டு திருவனந்தபுரத்தில் நாளை (சனிக்கிழமை) நவராத்திரி விழா தொடங்குகிறது. இதற்காக 13-ந்தேதி சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பட்டு பத்மநாபபுரம் அரண்மனைக்கு நேற்று முன்தினம் வந்தது. அங்கிருந்து சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன், முன்னுதித்த நங்கை அம்மன் ஆகிய 3 சாமி சிலைகள் ஊர்வலம் புறப்பட்டு இரவு குழித்துறை மகாதேவர் கோவிலை அடைந்தது.
 
அங்கு பக்தர்கள் ஓய்வெடுத்த பிறகு நேற்று காலை 8 மணிக்கு சாமி சிலைகள் புறப்பட வேண்டும். ஆனால் அதிகாலை 5 மணிக்கே கேரள அறநிலையத்துறை அதிகாரிகளின் வற்புறுத்தலால் புறப்பட்டு சென்றது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கமாக மதியம் களியக்காவிளைக்கு சென்றடையும் சாமிசிலைகள் காலை 8 மணிக்கே களியக்காவிளையை சென்றடைந்தது.

பின்னர் சாமி சிலைகளை கேரள அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சாமிசிலைகளுக்கு போலீஸ் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மற்றும் அதிகாரிகளும், திருவனந்தபுரம் ரூரல் சூப்பிரண்டு அசோக்குமார், திருவனந்தபுரம் துணை ஆணையர் மதுசூதனன், விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட துணை செயலாளர் சுபாஷ் குமார், பூசாரிகள் பேரமைப்பு மாவட்ட தலைவர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் குமரி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, மன்னரின் உடைவாளை கேரள அறநிலையத்துறை கமிஷனர் திருமேனியிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஊர்வலம் தொடர்ந்து பாறசாலை மகாதேவர் கோவிலை சென்றடைந்தது. அங்கு மதிய உணவுக்கு பின்பு புறப்பட்டு நெய்யாற்றின்கரை கிருஷ்ணசாமி கோவிலை சென்றடைந்தது. அங்கிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றடைகிறது.

அங்கு தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் திருவனந்தபுரம் கோட்டைக்கலம் உள்ளே உள்ள நவராத்திரி கொலு மண்டபத்தில் எழுந்தருள்வார். வேளிமலை முருகன் ஆரிய சாலை சிவன் கோவிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்ட அம்மன் கோவிலிலும் வைத்து நவராத்திரி பூஜைகள் நடக்கிறது. பூஜைகள் முடிந்த பிறகு சாமி சிலைகள் திருவனந்தபுரத்தில் இருந்து மீண்டும் புறப்பட்டு குமரி மாவட்டத்தை வந்தடையும். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட நிர்வாகமும், கேரள அரசும் இணைந்து செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory