» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை : காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 2 பேர் மீட்பு

வியாழன் 15, அக்டோபர் 2020 5:27:34 PM (IST)

குமரி மாவட்டத்தில் மலையோர பகுதியில் பெய்து வரும் கனமழையால் மோதிரமலையில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பேர் மீட்கப்பட்டனர்.

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. குலசேகரம் அருகே பேச்சிப்பாறை, கோதையாறு, பெருஞ்சாணி, திற்பரப்பு போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திற்பரப்பு அருவியில் நேற்று அதிக அளவில் வெள்ளம் கொட்டியது. பேச்சிப்பாறை அருகே குற்றியாறு, கல்லாறு, மாங்காமலை, மிளாமலை, முடவன்பொற்றை, குழவியாறு போன்ற மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். 

இந்த பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது. மலைகிராமங்களில் பாயும் கிழவியாறு, கல்லாறு, கோதையாறு போன்ற ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஆறுகளின் குறுக்கே உள்ள சப்பாத்து பாலங்களை வெள்ளம் மூழ்கடித்து செல்வதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால், குற்றியாறு, கல்லாறு, கிழவியாறு குடியிருப்பு, நடனம் பொற்றை, மாங்காமலை, மோதிரமலை உள்பட 14 மலையோர கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. 

இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். மோதிரமலையில் கிழவியாற்றின் குறுக்கே சப்பாத்து பாலம் உள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் சப்பாத்து பாலத்தை மூழ்கடித்த நிலையில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்து செல்கிறது. நேற்று மதியம் 2.30 மணியளவில் மோதிரமலையை சேர்ந்த மணி (47), சதீஷ் (32) ஆகியோர் மோட்டார் சைக்கிள் மூலம் சப்பாத்து பாலத்தை கடந்து செல்ல முயன்றனர்.

அப்போது, கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் அவர்கள் இருவரும் அடித்து செல்லப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கிய அவர்களது எழுப்பிய கூக்குரல் கேட்டு கரையோரம் நின்ற பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு கயிறுகளை வீசி அவர்கள் இருவரையும் மீட்டனர். அவர்களது மோட்டார் சைக்கிள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory