» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அனைவரும் எச்.ஐ.வி பரிசோதனை செய்ய வேண்டும் : குமரிஆட்சியர் அறிவுரை

புதன் 5, டிசம்பர் 2018 6:11:49 PM (IST)சமுதாய நலன் மற்றும் குடும்பநலனுக்காக தானாக முன்வந்து அனைவரும் எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் தினத்தில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் இன்று (05.12.2018) நடைபெற்றது. இதில் ஆட்சியர் பேசியதாவது, பொதுவாக மக்கள் தங்கள் உடல் நிலை சரியில்லாத போதோ, அல்லது எச்.ஐ.வி பாதிப்புக்கான அறிகுறி தெரியும் போதோ மட்டும் தான் எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்கிறார்கள். ஆனால் முன்னதாகவே தங்கள் நிலையை அறியும் பொருட்டு பரிசோதனை செய்வதால் அவர்களையும், அவர்கள் சார்ந்தவர்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். பொதுவாக எச்.ஐ.வி பரிசோதனை செய்ய முற்படும் நபர்களை எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களாக கருதும் எண்ணம் சமுதாயத்தில் காணப்படுகிறது. 

இந்நிலை மாற வேண்டுமானால் அனைவரும் தன்னார்வமாக எச்.ஐ.வி பரிசோதனை செய்ய முன் வரவேண்டும்.இவ்வாறான பரிசோதனைகளை செய்வதற்கு மாணவர்கள் மத்தியில் தயக்கமோ, கூச்சமோ, குழப்பமோ இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், இளைய சமுதாயம் தங்கள் குடும்பத்தினரையும், நண்பர்களையும் எச்.ஐ.வி பரிசோதனையை செய்ய அறிவுறுத்த வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 53 இடங்களில் எச்,ஐ.வி எய்ட்ஸ் குறித்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். 

இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் மதுசூதனன், துணை இயக்குநர் (தொழுநோய்) கிருஜா,துணை இயக்குநர் (காசநோய்) மரு.துரை (பொ), தலைவர், எச்.ஐ.வி.ஃஎய்ட்ஸ் உள்ளோர் நலச்சங்கம் பியூலா, எச்.ஐ.வி கூட்டமைப்பின் தலைவர் ராணி, தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory