» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளுக்கு அனுமதி : பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

வியாழன் 9, ஆகஸ்ட் 2018 4:00:19 PM (IST)

நிர்வாகப் பணிகளுக்காக ஆலைக்குள் செல்லலாம் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்றும், ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய தனியாக குழு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த மனுவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிட்டது. ஆனால், தமிழக அரசின் வாதத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிராகரித்ததோடு,  ஆலையை திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வேதாந்தா குழுமம் சார்பில் தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

மனு மீதான விசாரணையின் பொழுது காற்று, நீர் மாசு ஏற்படுத்தாத வகையில் ஆலை செயல்படுவதாகவும், விதிகள் மீறப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், ஆலை மூடப்பட்டதால் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து காப்பரை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் வேதாந்தா குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையானது வியாழனன்று பசுமைத் தீர்ப்பாயத்தில், அதன் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் முன்னிலையில் நடைபெற்றது. அப்பொழுது ஆலை நிர்வாகத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. அத்துடன் மிக முக்கியமான நிர்வாகக் கோப்புகள் மற்றும் கணிப்பொறிகள் ஆகியவை ஆலையின் வளாகத்தில் உள்ளன. எனவே குறைந்த பட்சமாக 30 நாட்களாவது ஆலை செயல்பட அனுமதிக்க வேண்டு என்று கோரிக்கை வைத்து வாதாடினார்.

ஆனால் அரசுத் தரப்பில் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆலையின் செயல்பாடுகள் மற்றும் விதிமீறல்கள் தொடர்பான முக்கியமான கோப்புகளை அவர்கள் அழித்து விடக் கூடும் என்ற வாதம் முன்வைக்கபட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோயல் நிர்வாகப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாக அதிகாரிகள் செல்லலாம் என்று அனுமதியளித்து உத்தரவிட்டார். ஆனால் அதே சமயம், கண்டிப்பாக எந்த விதமான உற்பத்தி பணிகளும் நடைபெறக் கூடாது என்றும் அவர் தனது உத்தரவில் தெளிவுபடுத்தினார்.


மக்கள் கருத்து

IndianAug 10, 2018 - 02:50:04 AM | Posted IP 162.1*****

Sterlite will start working. no ஜஸ்டிஸ்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory