» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்துக்கு ரயில்வே அமைச்சர் வர வேண்டுமென கோரிக்கை

புதன் 17, ஜனவரி 2018 1:13:28 PM (IST)நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்துக்கு ரயில்வே அமைச்சர் வருகை தந்து பணிகளை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்க குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையில் கூறியுள்ளதாவது,  நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் நாகர்கோவில் சந்திப்பு (கோட்டார்) ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் மார்க்கம் பயணிக்கும் போது 5 கிமீ தொலைவில் உள்ள சிறிய எப் பிரிவு ரயில் நிலையம் ஆகும். இந்த டவுண் ரயில் நிலையத்தில் முன்பதிவு வசதி கிடையாது. 

சாதாரண முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு மட்டுமே பெறமுடியும். அதற்காக தனியார் முகவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ரயில் வருவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் அவர் வந்து பயணச்சீட்டு வழங்குவார். ரயில் புறப்படும்போது பச்சைக் கொடி காட்டும் பணியையும் அவரே கவனித்து வருகிறார். ரயில் நிற்காத நேரங்களில் இந்த நிலையம் மூடப்பட்டிருக்கும். 

இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. தண்டவாளமும், நடைமேடையும் ஒரே உயரத்தில் உள்ளன. இந்த நடைமேடையில் இருந்து இளைஞர்கள்கூட ரயிலில் ஏறமுடியாது. வயதானவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் ரயில் ஏறுவதில் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். குடிநீர், கழிப்பறை வசதி, பயணிகளுக்கு ஓய்வு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இங்கில்லை. இந்த ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கிமீ தொலைவில் உள்ள வெட்டூர்ணிமடம் வரையுள்ள சாலையில் மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். நடைமேடையில் மின்கம்பங்கள் இருந்தும் மின்விளக்குகள் எரிவதில்லை. இருளில் பயணிகள் ரயில் ஏற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.  

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு சரக்கு ரயிலில் வரும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் லாரிகள் மூலம் மத்திய அரசுக்கு சொந்தமான பள்ளிவிளையில் உள்ள கிடங்குக்கு எடுத்து வரப்படுகின்றன. இதனால் தாமதம், போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களால் அரசுக்குப் பண விரயம் ஏற்படுகிறது.  எனவே, அருகேயுள்ள டவுண் ரயில் நிலையத்தை விரிவுபடுத்தி சரக்கு ரயில்களை நிறுத்த வசதி ஏற்படுத்தலாம். இந்த ரயில் நிலையத்தை கிராஸிங் நிலையமாக மாற்றப்படுவதால் எளிதாக குடஸ் ரயில்களை இங்கு நிறுத்தம் செய்யலாம்.  நாகர்கோவிலில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலைக் கருத்தில்கொண்டு, நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள குட்ஸ் ஷெட்டை பள்ளிவிளையில் உள்ள டவுண் நிலையத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பதே குமரி மாவட்ட பயணிகள், பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.

ஏணிவைத்து இறங்கிய பொதுமேலாளர்:-கடந்த 2013-ம் வருடம் தென்னக ரயில்வே பொது மேலாளர் டவுண் ரயில் நிலையத்தை பார்வையிட வந்தபோது ரயிலிருந்து இறங்குவதற்கு ஏணியை பயன்படுத்தினார். தென்னக ரயில்வே பொது மேலாளர் ஏணியில் இறங்கிய போது சாதாரண பயணிகளின் நிலைமை குறித்து ஏன் அவர் அக்கரை கொள்ளாமல தற்போது வரை எந்த ஒரு மாற்றமும் இன்றி இந்த ரயில் நிலையம் அவ்வாறே உள்ளது.நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்தில் ஹாப்பா – திருநெல்வேலி ரயிலில் குஜராத்தை சார்ந்த சுற்றுலா பயணி இறங்கும் போது நடைமேடை உயரம் குறைவாக இருந்த காரணத்தால் கீழே விழுந்து இறந்தார். 

இந்த விபத்து நடந்து ஒருவர் உயிரிழக்க நடைமேடை உயரம் குறைவாக இருந்ததே காரணம் ஆகும். நடைமேடை உயரம் குறைவாக உள்ளது என்றும் தெரிந்தும் எந்த ஒரு வசதியும் இல்லாத ரயில் நிலையத்தில் ரயில்களை இயக்கியுள்ளனர் ரயில்வே அதிகாரிகள். இது மட்டுமில்லாமல் நடை மேடையை உயர்த்தி கிராசிங் நிலையமாக மாற்ற நிதி ஒதுக்கப்பட்டு இதற்கான பணிகளை கடந்த ஆறு ஆண்டுகளாகவே  முடிக்கவில்லை. இதற்கும் ரயில்வே அதிகாரிகள்தான் காரணம் ஆகும். 

இந்த ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயிலில் குமரி மாவட்ட பயணிகள் பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் இந்த ரயில் குறைந்த அளவு பயணிகளுடன் இயங்கி வருகிறது. இது குமரி மாவட்டத்துக்கு புதிய ரயில்கள் இயக்குவதை வெகுவாக பாதிக்கிறது. அடுத்த வாரம் இருவழிபாதை பணிகளை துவங்கி வைக்க வருகைதரும் ரயில்வே அமைச்சர் நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்துக்கு வருகை தந்து அங்கு நடைபெறும் பணிகளை வேகப்படுத்தி  தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory