» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: அமெரிக்கா அறிவிப்பு!
வியாழன் 6, ஏப்ரல் 2023 5:01:40 PM (IST)
அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி, அம்மாநிலத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தை சீனா எப்போதும் ஜாங்னான் என்று குறிப்பிட்டு வருகிறது. இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தை உரிமை கோரும் முயற்சியின் ஒரு பகுதியாக அங்குள்ள 11 இடங்களுக்கு சீனா கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய பெயர்களை சூட்டியது.
சீனாவின் சிவில் விவகார அமைச்சகம் வெளியிட்ட இந்தப் பட்டியலில் 2 நிலப் பகுதிகள், 2 குடியிருப்பு பகுதிகள் 5 மலைச்சிகரங்கள், 2 ஆறுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. சீனாவின் இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அருணாச்சல் விவகாரத்தில் அமெரிக்கா கருத்து கூறியுள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில், "அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. இதில் ஒருதலைபட்சமான சீனாவின் நடவடிக்கையை அமெரிக்கா எதிர்க்கிறது” என்று தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேச பகுதிகளுக்கு சீனா இதுபோல் மறு பெயரிடுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன் 2017-ல் 6 இடங்களுக்கும் 2021-ல்15 இடங்களுக்கும் சீனா புதிய பெயரை சூட்டியது.