» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் குழுவின் தலைவரை குறிவைத்து இஸ்ரேல் வான்தாக்குதல்

திங்கள் 17, மே 2021 8:43:58 AM (IST)



பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் குழுவின் தலைவரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையிலான மோதல் 7-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது. நேற்று காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் தாக்குதல்களில் 26 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வான் தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரை குறிவைத்து ராக்கெட்டுகளை வீசி எறிந்தனர்.‌ கடந்த திங்கட்கிழமை ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் ராணுவம் இடையே மோதல் தொடங்கியதில் இருந்து இப்போது வரை காசாவில் 153 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்களில் 39 சிறுவர்களும் 22 பெண்களும் அடங்குவர்.

ராக்கெட் தாக்குதல்களுக்கு  பதிலடி

அதேபோல் ஹமாஸ் போராளிகளின் ராக்கெட் தாக்குதல்களில் தங்கள் தரப்பில் 2 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் கூறுகிறது.‌ தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த மோதலை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று சர்வதேச சமூகம் இருதரப்பையும் வலியுறுத்தி வருகிறது.

ஆனால் எவ்வளவு காலம் தேவைப்படுமோ அவ்வளவு காலம் காசா நகர் மீதான தாக்குதல்கள் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ சூளுரைத்துள்ளார். மேலும் தற்போது நடந்துவரும் மோதலுக்கு ஹமாஸ் போராளிகளே காரணம் என குற்றம் சாட்டிய அவர் காசாவில் இருந்து வரும் ராக்கெட் தாக்குதல்களுக்கு வலிமையான பதிலடி கொடுப்போம் எனவும் கூறினார். அதேசமயம் தங்களின் தாக்குதலில் காசா நகரில் பொதுமக்கள் உயிரிழப்பை குறைக்க சாத்தியமான அனைத்தையும் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சு

இதனிடையே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ மற்றும் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் ஆகியோரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து கவலை தெரிவித்தார்.‌ பெஞ்சமின் நேட்டன்யாஹூவிடம் பேசுகையில் தன்னை தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை அமெரிக்கா தொடர்ந்து ஆதரிப்பதாக கூறிய ஜோ பைடன் இரு தரப்பிலும் இறப்புகள் குறித்து கவலை தெரிவித்ததோடு பத்திரிகையாளர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

அதேபோல் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாசுடன் பேசியபோது அமெரிக்கா பாலஸ்தீன கூட்டாட்சியை வலுப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்த ஜோ பைடன் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகளை வீசுவது நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனிடையே காசா நகரில் ஹமாஸ் போராளிகள் அமைப்பின் அரசியல் தலைவரான யஹ்யா சின்வாரின் வீட்டை குண்டு வீசித் தகர்த்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.‌ அது மட்டுமின்றி யஹ்யா சின்வாரின் சகோதரரான முகமது சின்வாரின் வீடும் தரைமட்டமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் தலைவரின் வீடு குண்டு வீசி தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ ஒன்றையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பின் தளவாடங்கள் மற்றும் மனிதவள தலைவர்களாக இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. யஹ்யா சின்வாரின் வீடு குண்டு வீசித் தகர்க்கப்பட்டதை பாலஸ்தீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.‌ எனினும் யஹ்யா சின்வார் மற்றும் முகமது சின்வாரின் கதி என்ன என்பது குறித்து உடனடி தகவல்கள் இல்லை.


மக்கள் கருத்து

உண்மைமே 19, 2021 - 08:32:22 AM | Posted IP 162.1*****

தலைப்புல ஹமாஸ் தீவிரவாதிகள் அப்படி போடுங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory