» செய்திகள் - விளையாட்டு » உலகம்

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது ரோவர்: சீனா புதிய சாதனை

ஞாயிறு 16, மே 2021 10:42:11 AM (IST)



செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய சீனா அனுப்பிய ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கியது.

சீனா அண்மை காலமாக விண்வெளி ஆய்வு பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.‌ இதில் குறிப்பிடத்தக்க சில சாதனைகளையும் அந்த நாடு படைத்து வருகிறது. அண்மையில் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கி அங்கிருந்து கல் மற்றும் மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்து சாதனை படைத்தது சீனா. இதன் மூலம் அமெரிக்கா மற்றும் ரஷியாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே நிலவின் மாதிரிகளை சேகரித்த 3-வது நாடு என்ற பெருமையை சீனா பெற்றது.

அந்த வரிசையில் தற்போது அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக செவ்வாய் கிரகத்தில் தனது ரோவரை வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்துள்ளது சீனா. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக சீனா கடந்த ஆண்டு ஜூலை மாதம் தியான்வென்-1 என்கிற விண்கலத்தை லாங் மார்ச் 5 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. சுமார் 7 மாத பயணத்துக்கு பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் தியான்வென்-1 விண்கலம் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது.

இந்நிலையில் தியான்வென்-1 விண்கலத்துடன் அனுப்பப்பட்ட ‘ஜுரோங்' என பெயரிடப்பட்ட ரோவர் செவ்வாய் கிரகத்தில் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. 6 சக்கரங்களைக் கொண்ட ‘ஜுரோங்' ரோவர், செவ்வாய் கிரகத்தின் வடக்குப்பகுதியில் இருக்கும் பெரிய நிலப்பரப்பான உடோபியா பிளானிடியா என்கிற இடத்தில் தரையிறங்கியது. சீன நேரப்படி நேற்று காலை 7:18 மணியளவில் ‘ஜுரோங்' ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியதாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

‘ஜுரோங்' என்றால் நெருப்புக் கடவுள் என்று பொருள். இந்த ரோவரை சுமந்து சென்ற தியான்வென்-1 விண்கலம் பிப்ரவரி 1-ந்தேதி செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது. அப்போதிலிருந்து இந்த விண்கலம் மிக‌ தெளிவான புகைப்படங்களை எடுத்து, ‘ஜுரோங்' ரோவர் தரையிறங்குவதற்கான பாதுகாப்பான இடத்தை ஆராய்ந்து வந்தது. இந்த ரோவர், பாதுகாக்கும் கேப்ஸ்யூல், பாராசூட், ராக்கெட் தளம் போன்றவைகளை பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. ‘ஜுரோங்' ரோவரின் எடை சுமார் 240 கிலோ கிராம் ஆகும். இதற்கான ஆற்றல் சூரியவிசை தகடுகளில் இருந்து கிடைக்கிறது.

‘ஜுரோங்' ரோவரில் ஓர் உயர்ந்த கம்பம் போன்ற அமைப்பில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதன் மூலம் படமெடுக்கவும், வழிகாட்டவும் முடியும். இது தவிர 5 கூடுதல் உபகரணங்கள் இந்த ‘ஜுரோங்' ரோவரோடு பொருத்தப்பட்டு இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தில் இருக்கும் பாறைகளைக் குறித்து ஆராயவும், நிலத்தடியில் நீரினாலான பனிக்கட்டிகள் இருக்கின்றனவா எனவும் ஆராய முடியும். செவ்வாயில் தரையிறங்குவது மிகவும் கடினமானது என்பதால், சீனாவின் ‘ஜுரோங்' ரோவரின் வெற்றி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இதுவரை அமெரிக்கர்கள் மட்டுமே செவ்வாய் கோளில் தரையிறங்குவதில் அதிக அனுபவம் பெற்றவர்களாக இருந்தார்கள். தற்போது ‘ஜுரோங்' ரோவர் தரையிறங்கியதால், செவ்வாயில் ரோவரை களமிறக்கிய 2-வது நாடு என்கிற பெருமையை சீனா பெற்றிருக்கிறது. இதையொட்டி சீன அதிபர் ஜின்பிங் சீன விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அவர் தனது வாழ்த்துச்செய்தியில் ‘‘இந்த சவாலை எதிர்கொள்ள நீங்கள் போதுமான தைரியத்தோடு இருந்தீர்கள், உங்கள் பணியில் சிறந்து விளங்கினீர்கள், கோள்களை ஆராயும் நாடுகள் பட்டியலில் நம் நாட்டை முன்னேற்றம் காண வைத்திருக்கிறீர்கள்’’ என குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory