» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தைவானில் சுரங்கப்பாதைக்குள் ரயில் தடம்புரண்டு கோர விபத்து: 48 பேர் உயிரிழப்பு

சனி 3, ஏப்ரல் 2021 8:32:33 AM (IST)தைவானில் சுரங்கப் பாதைக்குள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தைவானில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 4 அல்லது 5-ந்தேதி கல்லறை திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் தங்கள் மூதாதையர்களின் கல்லறைகளுக்கு சென்று, அவற்றை சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்து மூதாதையர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து வழிபாடு நடத்துவர். இந்த கல்லறை திருவிழா தைவானில் ஒரு தேசிய விடுமுறையாகும். எனவே வெளி மாகாணங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் மூதாதையர்களின் கல்லறைகளுக்கு சென்று மரியாதை செலுத்துவதற்காக சொந்த ஊருக்குத் திரும்புவது வழக்கம். இதனால் ஒவ்வொரு ஆண்டும் 2 நாட்களுக்கு முன்பே திருவிழா களைகட்ட தொடங்கிவிடும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கல்லறை திருவிழா தற்போது தொடங்கி இருப்பதால் ரயில்கள் மற்றும் பஸ்கள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் நேற்று காலை தலைநகர் தைபேயிலிருந்து தென்கிழக்கு கடற்கரை நகரமான தைதுங் நகருக்கு பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டு சென்றது. இது மணிக்கு 139 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ரயில் ஆகும். கல்லறை திருவிழா காரணமாக இந்த ரயிலில் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 8 பெட்டிகளை மட்டுமே கொண்ட இந்த ரயிலில் சுமார் 500 பயணிகள் வரை பயணம் செய்தனர்.

இந்த நிலையில் இந்த ரயில் ஹூலியன் என்ற நகரில் உள்ள சுரங்க பாதைக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு ரயில்வே கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனம் ஒன்று தண்டவாளத்தில் கவிழ்ந்து கிடந்தது. அந்த வாகனத்தின் மீது இந்த அதிவேக ரயில் பயங்கரமாக மோதியது. இதில் நிலைதடுமாறிய ரயில் சுரங்கப் பாதைக்குள் பாய்ந்து பின்னர் தடம் புரண்டது. ரயிலின் முதல் 4 பெட்டிகள் சுரங்கப் பாதைக்குள் கவிழ்ந்தன.

அதில் இருந்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி நசுங்கினர். இந்த கோர விபத்தில் 48 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 60-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். குறுகலான சுரங்கப் பாதைக்குள் ரயில் பெட்டிகள் கவிழ்ந்ததால், அதனுள் சிக்கியிருந்த பயணிகளை மீட்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. எனினும் ஒரு சில பயணிகள் ரயில் பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தாமாகவே வெளியேறி உயிர் தப்பினர்.‌ அதேசமயம் சுமார் 200 பயணிகள் வரை இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாகவும் அவர்களை மீட்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும் தெரிகிறது.

இதனிடையே இந்த கோர விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அந்த நாட்டின் அதிபர் சாய் இங் வென், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது இப்போது எங்கள் மிக உயர்ந்த முன்னுரிமை என கூறினார். தைவானில் சுமார் 30 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்து இது என்று கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 1991-ம் ஆண்டு அந்த நாட்டில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 30 பேர் பலியானதே சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory