» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது ராணுவ ஆட்சி அடக்குமுறை; ஐ.நா. எச்சரிக்கை

செவ்வாய் 16, பிப்ரவரி 2021 5:26:03 PM (IST)

மியான்மரில் போராட்டக்காரர்கள் மீதான ராணுவ ஆட்சியின் அடக்குமுறைக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, தன் ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மியான்மர் ராணுவம். ஆனால் மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டில் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த 10 நாட்களாக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்து வரும் தலைநகர் நேபிடாவ், யாங்கூன், மாண்டலே ஆகிய நகரங்களின் முக்கிய சாலைகளில் ஆயுதமேந்திய ராணுவ வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையில் போராட்டம் குறித்த செய்திகள் மற்றும் தகவல்கள் பரவுவதை தடுக்கும் விதமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நாடு முழுவதும் மீண்டும் இணைய சேவை முடக்கப்பட்டது. இப்படி ராணுவம் தனது பிடியை இறுக்கி வந்தாலும் அதற்கு எதிரான மக்களின் போராட்டம் தொடரத்தான் செய்கிறது.

இதற்கிடையே, மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு  20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மேலும், ராணுவ அதிகாரிகளுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவர்களுக்கு நீண்ட கால சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுவதாக ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. சபையின் மியான்மர் நாடிற்கான சிறப்பு தூதர் கிறிஸ்டின் ஷ்ரானர் புர்கெனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டத்தை ஒடுக்க மியான்மர் ராணுவம் அடக்குமுறைகளை மேற்கொள்வதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைதியான போராட்டத்திற்கான மக்களின் உரிமை மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மியான்மரில் நடப்பதை உலக நாடுகள் கவனித்து வருவதாகவும், போராட்டக்காரர்கள் மீது கடுமையாக நடந்து கொண்டால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory