» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி : அதிகாரபூர்வமாக அறிவிப்பு

வியாழன் 7, ஜனவரி 2021 5:16:27 PM (IST)

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டத்தில் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்தது. இதில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால், இந்த தேர்தல் வெற்றியை ஏற்காத அதிபர் ட்ரம்ப் பல்வேறு மாகாண நீதிமன்றங்களில் குடியரசுக் கட்சி சார்பில் முறையீடு செய்தார். ஆனால், பெரும்பலாானவை தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் நடந்த தேர்தலில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் இருவருக்கும் பெரும்பான்மை கிடைக்காததையடுத்து, மறுதேர்தல் நடந்தது. இதில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் இருவர் வெற்றி பெற்றனர். இதன் மூலம் பிரதிநிதிகள் சபை, செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் ஆதிக்கம் 2009-ம் ஆண்டுக்குப் பின் வந்துள்ளது. ஜோ பைடன் வெற்றி குறித்து அதிகாரபூர்வ ஒப்புதல் அளிக்க நேற்று நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. 

ஆனால், நாடாளுமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திக் கலவரம் செய்தனர். இந்தப் போராட்டத்தில் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் பலர் காயமடைந்தனர். போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து கூட்டுக்குழுக் கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டு எம்.பி.க்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் பின்னிரவில் மீண்டும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்டு சான்றளிக்கப்பட்டது.  இதையடுத்து, வரும் 20-ம் தேதி அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்கிறார். துணை அதிபராத கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ளார். கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சியில் முக்கியமானவர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.

நவம்பர் 3-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் இருவரும் 8 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, 306 தேர்வாளர்கள் வாக்குகளைப் பெற்றனர். ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகளை அதிபர் ட்ரம்ப் ஏற்கவில்லை, பல்வேறு நீதிமன்றங்களில் முறையீடு செய்தார். அதுமட்டுமல்லாமல் நேற்று நடந்த நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டத்திலும் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி செல்லாது என்று அறிவிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸை அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தினார். ஆனால், அதற்கு மைக் பென்ஸ் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory