» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தமிழக மீனவர்கள் பிரச்சினை : மோடி - ராஜபக்சே காணொலி மூலம் இன்று பேச்சுவார்த்தை!

சனி 26, செப்டம்பர் 2020 1:12:49 PM (IST)

 
 
காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் ராஜபக்சே இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றி ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது.

இலங்கையில் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ராஜபக்சே குடும்பத்தின் பொதுஜன பெரமுனா கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது.மகிந்த ராஜபக்சே 4-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவருக்கு இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி- இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இடையிலான இரு நாட்டு உச்சி மாநாடு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இரு தலைவர்களும் காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில் இரு தரப்பு உறவுகளை விரிவாக ஆய்வு செய்வார்கள் என்றும் இலங்கையில் இந்தியா செய்துவரும் ஏராளமான உள் கட்டமைப்பு திட்டங்கள் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே இன்று மோடி- மகிந்த ராஜபக்சே இடையே நடக்கும் பேச்சுவார்த்தையில் மீனவர்களின் பிரச்சினை முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ராஜபக்சேவின் மீடியா அலுவலகம் தரப்பில் கூறும்போது, மகிந்த ராஜபக்சே நேற்று உள்ளூர் மீனவ அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதையடுத்து இந்தியா- இலங்கை இடையிலான பிரதமர்கள் பேச்சுவார்த்தையில் மீனவர்கள் பிரச்சினை முக்கிய பங்கு வகிக்கும். 

பிரதமருடனான சந்திப்பில் உள்ளூர் மீனவ சமுதாயத்தினர் தெரிவித்த போது, கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் நுழைந்து மீன் பிடிப்பதை இந்திய அதிகாரிகள் தடுக்கவில்லை என்றும் இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பேச்சுவார்த்தையின் போது ஆலோசிக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய பிரமரிடம் தெரிவித்து தீர்வு காணப்படும் என்று பிரதமர் ராஜபக்சே உறுதியளித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது செய்து வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடியை டெல்லியில் மகிந்த ராஜபக்சே சந்தித்து பேசினார். அதன்பிறகு அவர்கள் 2 முறை தொலைபேசியில் பேசி உள்ளனர். அதன்பிறகு தற்போது இரு நாட்டு தலைவர்களும் முதல் முறையாக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory