» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா வைரஸ் தாக்குதலில் 41பேர் பலி: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!

சனி 25, ஜனவரி 2020 12:22:46 PM (IST)சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு  பயின்று வரும் தமிழக மாணவர்கள் வெளியேற முடியாமல்  தவித்து வருகின்றனர். 

சீனாவில்  கரோனா வைரஸ் எனும் நோய்த் தொற்றால்  889 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 பேர் உயிரிழந்துள்ளனர். சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு பரவி வரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் சூழல் அதிகரித்துள்ளது. சீனாவில் வூஹான் நகர்ப்பகுதி மீன்சந்தையிலிருந்து கரோனா வைரஸ் பரவியிருக்கக்கூடும் என கூறப்படுகிறது.இதனால், 5 முக்கிய நகரங்கள் ஸ்தம்பித்ததோடு, 13 நகரங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ரயில், விமான நிலையங்கள், வணிக நிறுவனங்கள், அங்காடிகள் உள்ளிட்டவை செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால், சீனாவில் லட்சக்கணக்கான மக்கள் அச்சமடைந்துள்ளதோடு, காற்றில் பரவும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க பல்வேறு மருத்துவமனைகளை நாடி வருகின்றனர். மேலும், பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களின் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு, வெளியில் தங்கி பயிலும் மாணவர்களின் நிலைமை அதைவிட மோசமானதாக உள்ளது எனக்கூறப்படுகிறது. தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து திரளான மாணவர்கள் சீன கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். இவர்களின் நிலை குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் மாணவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து சீனாவில் பயின்று வரும் தமிழக மாணவர்களான மணிசங்கர் (புதுக்கோட்டை), ராகுல் (ஈரோடு), மினாலினி (கோவை) ஆகியோர் செல்ப்பேசி வாயிலாக  கூறியதாவது:சீனாவில் தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன, நாங்கள் இருவரும் (மணிசங்கர், மினாலினி) வெளியில் தங்கி பல்கலைக்கழகத்துக்குச் சென்று வருகிறோம். வைரஸ் பாதிப்பால், வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அடுத்த 3 நாள்களுக்கு மட்டுமே உணவு செய்ய தேவையான பொருள்கள் உள்ளது. காற்றில் பரவி வரும் இந்த வைரஸ் தொற்று பாதிக்காமல் இருக்க முகமூடி அணிவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளோம். ஆனால், வெளியில் சென்று முகமூடி வாங்குவதற்கு அச்சமாக உள்ளது. மருத்துவமனைகளில் அதிக கூட்டம் அலைமோதுவதால் பலரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கவுள்ள நிலையில் ஏற்கனவே வணிக கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், பல்கலை. வளாகத்தில் உள்ள ராகுலுக்கு முகமூடி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.  

இந்திய தூதரகத்திலிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அதில், கரோனா வைரஸ் தொற்று குறித்தும், எங்களது நிலை குறித்தும் கேட்டறியப்பட்டது. அதோடு, உதவி எண்களும் அதிகாரிகள் தந்துள்ளனர். ஆனால், 3 நாள்களுக்கு பிறகு உணவுக்கும், முகமூடிக்கும் என்ன செய்வோம் என்று தெரியவில்லை. இந்த சூழலில் தாய்நாட்டுக்கு திரும்புவதை விட இங்கேயே பாதுகாப்பாக இருக்க முடியும் என்று நம்புகிறோம். ஆனாலும், இந்திய தூதரகத்தின் உதவியை பெற காத்திருக்கிறோம் என்றனர். 

இதையடுத்து, புதுக்கோட்டை மாணவர் மணிசங்கரின் பெற்றோர் மாவட்ட நிர்வாகத்தின் உதவியை நாடியுள்ளனர். கரோனா வைரஸ் குறித்து சனிக்கிழமை முதல் விரிவான  ஆய்வுகூட்டம் நடத்துவதற்கு திருச்சி மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory