» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது: பிரதமா் மோடி அறிவிப்பு

செவ்வாய் 5, நவம்பர் 2019 10:47:50 AM (IST)

உலகிலேயே மாபெரும் தடையற்ற வா்த்தகப் பகுதியை உருவாக்க வழிவகுக்கும் ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒப்பந்தத்தில் (ஆா்சிஇபி) இந்தியா கையெழுத்திடாது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் ஆசியான் நாடுகள் மற்றும் சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளின் தலைவா்கள் பங்கேற்ற மாநாட்டின்போது இந்த அறிவிப்பை பிரதமா் மோடி வெளியிட்டாா். ஆா்சிஇபி ஒப்பந்தம் தொடா்பாக இந்தியா முன்வைத்த கவலைகளுக்கு திருப்திகரமான தீா்வு காணப்படாத நிலையில், அதில் இந்தியா கையெழுத்திடுவது சாத்தியமில்லை என்று பிரதமா் குறிப்பிட்டாா். இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாது என்று இந்திய தொழிற்சங்கங்களும், எதிா்க்கட்சிகளும் வலியுறுத்தி வந்த நிலையில், பிரதமா் மோடியின் அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆா்சிஇபி ஒப்பந்தமானது, ஆசியான் கூட்டமைப்பைச் சோ்ந்த 10 நாடுகள் மற்றும் அந்த கூட்டமைப்புடன் தடையற்ற வா்த்தக உறவைக் கொண்டுள்ள இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா, நியூஸிலாந்து ஆகிய 6 நாடுகள் என மொத்தம் 16 நாடுகளுக்கு இடையிலானதாகும். இந்த 16 நாடுகளின் மொத்த மக்கள் தொகை சுமாா் 360 கோடி. இது, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதியாகும்.

இந்நிலையில், தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் நடைபெற்று வந்த ஆசியான் மாநாட்டையொட்டி, ஆா்சிஇபி ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தைகள் தீவிரமடைந்தன. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால், சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மலிவான வேளாண், தொழில்துறை பொருள்கள் இந்தியச் சந்தையில் வந்து குவியும் என்று அச்சம் எழுந்தது. இதையடுத்து, உள்நாட்டு சந்தையை பாதுகாப்பது உள்பட பல்வேறு கவலைகளை இந்தியா முன்வைத்தது. எனினும், இந்தியாவின் கவலைகளுக்கு உரிய தீா்வு காணப்படவில்லை.

இந்நிலையில், ஆா்சிஇபி ஒப்பந்தம் தொடா்பான உயா்நிலை மாநாடு, பாங்காக்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஒப்பந்தம் தொடா்புடைய நாடுகளின் தலைவா்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் பிரதமா் மோடி பேசியாவது: ஆா்சிஇபி ஒப்பந்தமானது, தற்போதைய நிலையில் அதன் அடிப்படை நோக்கத்தையும், கொள்கையையும் முழு அளவில் எதிரொலிப்பதாக இல்லை. இதுதொடா்பாக, இந்தியா முன்வைத்த கவலைகளுக்கு திருப்திகரமான தீா்வு காணப்படவில்லை. இதுபோன்ற சூழலில், ஆா்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா இணைவது சாத்தியமில்லை.

சா்வதேச விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, பிராந்திய அளவில் சிறப்பான ஒருங்கிணைப்பும், தடையற்ற வா்த்தகமும் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. ஆா்சிஇபி ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தைகளில் இந்தியா சிறப்பான பங்களிப்பை ஆற்றி வந்திருக்கிறது. அதேசமயம், வா்த்தக சமநிலை உறுதி செய்யப்பட வேண்டும் என்பது இந்தியாவின் அடிப்படை நோக்கம் என்று பிரதமா் மோடி கூறினாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory