» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்திய வங்கிகளிடம் பெற்ற முழுக் கடனையும் செலுத்தத் தயார்: விஜய் மல்லையா

புதன் 3, ஜூலை 2019 3:42:56 PM (IST)

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் பெற்ற முழுக் கடனையும் செலுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனரான விஜய் மல்லையா இந்திய வங்கிகளிடம் ரூ.9,000 கோடிக்கு மேல் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டே ஓடியவர். அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர். லண்டனில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு நாடுகடத்திக் கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்திய அரசு தொடர்ந்த வழக்கில் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக விஜய் மல்லையா லண்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அவரது இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கு எதிராக அவரது தரப்பிலிருந்து மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நேற்று (ஜூலை 2) நடைபெற்றது. இதில் நீதிபதிகள் ஜார்ஜ் லெக்காட் மற்றும் ஆண்ட்ரூ போப்பிள்வெல் ஆகியோர் அடங்கிய அமர்வு மல்லையாவை லண்டனிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தும் உத்தரவிற்கு அவர் மீண்டும் மேல்முறையீடு வழக்கு தொடர அனுமதியளித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவால் விஜய் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு வெளியான பின்னர் விஜய் மல்லையா தனது ட்விட்டர் பதிவில், "கடவுள் இருக்கிறார். நீதி நிலைநாட்டப்பட்டது. எனக்கு எதிரான குற்றங்கள் பொய்யானவை. நான் மீண்டும் கேட்கிறேன்; கிங்ஃபிஷர் நிறுவனத்துக்காக வங்கிகளிடம் நான் பெற்ற கடன் முழுவதையும் திருப்பிக் கொடுக்கத் தயாராக உள்ளேன். வங்கிகள் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல, கிங்ஃபிஷர் பணியாளர்களின் சம்பளப் பாக்கியையும் நான் முழுவதுமாக வழங்கி விடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக மார்ச் 26ஆம் தேதி விஜய் மல்லையா தனது ட்விட்டர் பதிவில், தன்னிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தைக் காப்பாற்றும்படி இந்திய வங்கிகளைக் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் வேலைவாய்ப்புகளும், நகர இணைப்பும், நிறுவனமும் பாதுகாக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் தனது கடன் பாக்கியைச் செலுத்தத் தயாராக இருப்பதாக மல்லையா கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

அப்படியாJul 8, 2019 - 10:12:19 PM | Posted IP 162.1*****

ஹீ ஹீ ஹீ ... 5 வருசமா அப்படியே சொல்லிட்டு இருக்கான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory