» செய்திகள் - விளையாட்டு » உலகம்

முதல் முறையாக கிம், புதின் சந்திப்பு : வடகொரியா, ரஷியா உறவை பலப்படுத்த உறுதி

வெள்ளி 26, ஏப்ரல் 2019 9:14:56 AM (IST)முதல் முறையாக சந்தித்து பேசிய வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், ரஷிய அதிபர் புதினும் இருநாட்டு உறவை பலப்படுத்த உறுதி பூண்டனர்.

பனிப்போர் காலத்தில் ரஷியாவை உள்ளடக்கிய கம்யூனிஸ்டு கூட்டமைப்பான, சோவியத் ஒன்றியத்துக்கும் வடகொரியாவுக்கும் இடையில் நெருக்கமான உறவு இருந்தது. ராணுவம் மற்றும் வணிக ரீதியில் இந்த நட்புறவு பேணப்பட்டு வந்தது. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் சிதைந்துபோனதற்கு பிறகு, முதலாளித்துவ நாடாக உருவெடுத்த ரஷியாவுடன் வடகொரியாவின் வணிக உறவுகள் சுருங்கிப்போயின. அதன்பிறகு வடகொரியா, சீனாவின் பக்கம் சாய்ந்து அதனை தனது முக்கிய கூட்டாளியாக ஆக்கிக்கொண்டது.

இதற்கிடையில் அதிபர் புதின் தலைமையின் கீழ் பொருளாதார ரீதியில் மீண்டெழுந்த ரஷியா, சோவியத் ஒன்றிய காலத்தில் வடகொரியா வாங்கிய கடன் முழுவதையும் நல்லெண்ண நடவடிக்கையாக தள்ளுபடி செய்தது. இதன் மூலம் ரஷியா, வடகொரியா இடையிலான நல்லுறவு மீண்டும் துளிர்த்தது. இந்த நிலையில் அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை முறிந்த நிலையில், தமக்கும் வலிமையான கூட்டாளிகள் உண்டு என்று காட்டவேண்டிய தேவை வடகொரியாவுக்கு எழுந்தது.

அதே போல் தென்கொரியா உடனான நட்பின் வாயிலாக கொரிய தீபகற்பத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்காவிடம், கொரிய தீபகற்பத்தில் தனக்கும் செல்வாக்கு உண்டு என்று காட்ட வேண்டிய தேவை ரஷியாவுக்கு இருந்ததாக கருதப்படுகிறது. இப்படியான சூழலில் முதல் முறையாக ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசுவதற்காக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ரெயில் மூலம் ரஷியாவுக்கு சென்றார். அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள துறைமுக நகரமான விலாடிவோஸ்டாக்கில் உள்ள ரூஸ்கை தீவில் நேற்று காலை இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தை மிகவும் இணக்கமாக நடந்தது. இந்த சந்திப்பில் ரஷியா-வடகொரிய உறவை மேம்படுத்த இருதரப்பிலும் உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது. அத்துடன் கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க ரஷியா தன்னால் முடிந்த உதவியை செய்யும் என புதின் உறுதியளித்தார்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருநாட்டு தலைவர்களும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது இந்த சந்திப்பு குறித்து புதின் கூறுகையில், "கொரிய தீபகற்பத்தில் நிலவும் சூழ்நிலையை எப்படி சரி செய்வது என்பதையும், தற்போது நடந்துகொண்டிருக்கும் நேர்மறையான செயல்பாடுகளுக்கு ஆதரவாக ரஷியா என்ன செய்ய முடியும் என்பதையும் நாம் புரிந்துகொள்வதற்கு இந்த சந்திப்பு பெரிதும் உதவும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டார். அதனை தொடர்ந்து பேசிய கிம் ஜாங் அன் "ஏற்கனவே நீண்ட நட்பும், வரலாறும் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் உறுதியானதாக, ஆழமானதாக மாற்றும் ஒரு பயனுள்ள சந்திப்பாக இதை நம்புகிறேன்” என தெரிவித்தார்.

முன்னதாக, பத்திரிகையாளர்களிடம் பேசிய ரஷிய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், பாதியில் நின்றுபோன 6 நாடுகளை உள்ளடக்கிய பேச்சுவார்த்தைதான் கொரிய தீபகற்பத்தில் உள்ள அணு ஆயுதப் பிரச்சினையை கையாள்வதற்கு பயனுள்ள வழியாக இருக்கும் என கூறினார். 2003-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தை வடகொரியா, தென் கொரியா, சீனா, ஜப்பான், ரஷியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory