» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வங்கியில் ரூ.13,000 கோடி கடன் மோசடி: நீரவ் மோடிக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் கைது ஆணை!!

செவ்வாய் 19, மார்ச் 2019 10:43:38 AM (IST)

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் மோசடி செய்துவிட்டு பிரிட்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர் நீரவ் மோடிக்கு (48) எதிராக லண்டன் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர், கடந்த ஆண்டு வெளிநாட்டுக்குத் தப்பினர். இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக உலவி வருவதாக அந்நாட்டின் நாளிதழ் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டது. அதில், லண்டனில் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில் நீரவ் மோடி வசித்து வருகிறார்; புதிதாக வைர வியாபாரத்திலும் அவர் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது. 

மேலும், நீரவ் மோடியின் தற்போதைய புகைப்படங்களும் வெளியாகி இருந்தன. இது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் அமலாக்கத்துறை தீவிரமாக செயலாற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. ஆனால், இதற்கு அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்தது. மேலும், நீரவ் மோடியை நாடு கடத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிலையில், அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், நீரவ் மோடிக்கு எதிராக கைது ஆணையைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, லண்டன் நகர போலீஸார் விரைவில் நீரவ் மோடியை கைது செய்வார்கள் என்று தெரிகிறது. இந்தக் கைது ஆணை சில நாள்களுக்கு முன்பே பிறப்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இப்போதுதான் அமலாக்கத் துறைக்கு கிடைத்துள்ளது.

நீரவ் மோடி கைது செய்யப்பட்டாலும், அவருக்கு ஜாமீன் கோர உரிமை உண்டு. அவரை நாடு கடத்துவது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் இதேபோன்ற கடன் மோசடியில் ஈடுபட்டு பிரிட்டனுக்குத் தப்பியோடிய மற்றொரு தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் தொழிலதிபர் நீரவ் மோடி அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் பெற்று முறைகேடு செய்தது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்டவை விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள அவர்களது பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory