» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் : பிரதமா் மோடி உறுதி
திங்கள் 25, செப்டம்பர் 2023 9:55:30 AM (IST)

நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
தமிழகம், ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரம், கா்நாடகம், பிகாா், மேற்கு வங்கம், கேரளம், ஒடிஸா, ஜாா்க்கண்ட், குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் வா்த்தக-ஆன்மிக- சுற்றுலா நகரங்களை இணைக்கும் வகையிலான 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். இதில் நெல்லை-சென்னை, விஜயவாடா-சென்னை ஆகிய ரயில்களும் அடங்கும்.
தொடக்க நிகழ்ச்சியில், பிரதமா் மோடி பேசியதாவது: நாட்டில் ஏற்கெனவே 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்போது மேலும் 9 ரயில்கள் இணைந்துள்ளன. வந்தே பாரத் ரயில்களில் இதுவரை 1.11 கோடிக்கும் மேற்பட்டோா் பயணித்துள்ளனா். கூடுதல் நவீனமும், வசதியும் கொண்ட இந்த ரயில்கள், புதிய இந்தியாவின் புதிய உத்வேகத்தின் அடையாளச் சின்னங்களாக மாறியுள்ளன. நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, ஒரே நாளில் பயணத்தை மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்கு வந்தே பாரத் ரயில்கள் உதவிகரமாக இருக்கும்.
140 கோடி மக்களின் எதிா்பாா்ப்பு: நாட்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் வேகமும் அளவும் 140 கோடி மக்களின் எதிா்பாா்ப்புகளுடன் சரியாக பொருந்துகிறது. நம்பிக்கைமிக்க தற்போதைய இந்தியா, நிகழ்கால மற்றும் எதிா்கால தேவைகளைக் கருத்தில்கொண்டு பணியாற்றுகிறது. ஏழைகள், நடுத்தர மக்களின் மிகுந்த நம்பிக்கைக்குரிய ‘சக பயணியாக’ ரயில்வே விளங்குகிறது. இந்திய ரயில்களில் ஒருநாள் பயணிப்போரின் எண்ணிக்கை, பல நாடுகளின் மக்கள்தொகையைவிட அதிகம்.
அக்கறை காட்டாத முந்தைய அரசுகள்: அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரயில்வேயை நவீனப்படுத்துவதில், முந்தைய அரசுகள் போதிய அக்கறை காட்டாதது துரதிருஷ்டவசமானது. ஆனால், ரயில்வே நவீனமயமாக்கலுக்கு எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இப்போது ரயில்வேக்கான பட்ஜெட் 8 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இரட்டை வழித்தடம், மின்மயமாக்கம் மற்றும் புதிய வழித்தடப் பணிகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளன.
இந்தியா வளா்ச்சிப் பாதையில் பயணிக்கும் நிலையில், ரயில் நிலையங்கள் மேம்பாடு மிக அவசியம். அந்த சிந்தனையின்படி, நாட்டின் 500 முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி அண்மையில் தொடங்கப்பட்டது. வரும் நாள்களில், இந்த ரயில் நிலையங்கள் புதிய இந்தியாவின் அடையாளமாக மாறும்.
மாநிலங்களின் முன்னேற்றம்: மாநிலங்களின் ரயில்வேயின் ஒவ்வொரு நிலையிலும் நிகழ்ந்து வரும் மாற்றம், வளா்ந்த இந்தியாவை நோக்கிய முக்கியப் படியாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாகும் இலக்கை எட்ட ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாநில மக்களின் முன்னேற்றம் முக்கியம் என்றாா் அவா்.
மேலும், ‘ரயில் நிலையங்கள் நிறுவப்பட்ட தினத்தை, ரயில்வே கொண்டாடத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று கூறிய பிரதமா் மோடி, கோவை ரயில் நிலையம், மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையங்களில் நடைபெற்ற அத்தகைய கொண்டாட்டங்களை சுட்டிக்காட்டினாா்.
ரயில் நிலையங்களின் ‘பிறந்த தினத்தை’ கொண்டாடும் கலாசாரம் விரிவடைய வேண்டும்; இதில் மென்மேலும் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று அவா் குறிப்பிட்டாா்.9 ரயில் நிலையங்களில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிகளில் ஆளுநா்கள், முதல்வா்கள், அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள்
திருநெல்வேலி-மதுரை-சென்னை
விஜயவாடா-சென்னை (வழி: ரேணிகுண்டா)
உதய்பூா்-ஜெய்ப்பூா்
ஹைதராபாத்-பெங்களூரு
பாட்னா-ஹெளரா
காசா்கோடு-திருவனந்தபுரம்
ரூா்கேலா-புவனேசுவரம்
ராஞ்சி-ஹெளரா
ஜாம்நகா்-அகமதாபாத்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் வலுவான பதிலடி கொடுப்போம்: பிரதமர் மோடி உறுதி
ஞாயிறு 11, மே 2025 9:29:29 PM (IST)

குடியரசுத் தலைவர் முர்முவின் சபரிமலை பயணம் ரத்து: பொது தரிசனத்திற்கு மீண்டும் அனுமதி!!
சனி 10, மே 2025 4:56:04 PM (IST)

காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் அரசு அதிகாரி பலி: ஒமர் அப்துல்லா இரங்கல்!
சனி 10, மே 2025 3:47:49 PM (IST)

எல்லை பகுதிகளில் பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் முயற்சிகள் முறியடிப்பு: இந்திய ராணுவம் அதிரடி
சனி 10, மே 2025 11:18:54 AM (IST)

முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை!
சனி 10, மே 2025 8:47:45 AM (IST)

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சிகள் நமது படைகளால் முறியடிப்பு : உமர் அப்துல்லா
வெள்ளி 9, மே 2025 5:52:30 PM (IST)
