» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மரண தண்டனையை நிறைவேற்ற மாற்று வழிகள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை

புதன் 22, மார்ச் 2023 11:15:34 AM (IST)

மரண தண்டனையை நிறைவேற்ற வலி குறைவான மாற்று வழிகளை ஆராயுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மரண தண்டனையை தூக்கு தண்டனையாக நிறைவேற்றாமல் வேறு வழிகளில் நிறைவேற்றலாம் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு வந்தது.

அப்போது மூத்த வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா, சட்ட ஆணையத்தின் அறிக்கை ஒன்றை படித்துக் காட்டினார். அதில் இந்தியாவில் நிறைவேற்றப்படும் மரண தண்டனையானது மிகவும் கொடூரமானது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ரிஷி மல்ஹோத்ரா தெரிவித்தார். இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதாவது: நாட்டில் நிறைவேற்றப்படும் மரண தண்டனை என்பது தூக்கு தண்டனையாகும். இது மிகவும் கொடூரமானதா என்பது தொடர்பாக விவாதம் நடத்த மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும்.

மேலும் மரண தண்டனையை, குறைந்த வலியுடன் நிறைவேற்றுவதற்கான மாற்று வழிகள் உள்ளனவா என்பது குறித்தும் மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்கவேண்டும். இதுதொடர்பாக விவாதம் நடத்தி, தகவல்களை சேகரிக்க வேண்டும். இந்த விவரங்களைச் சேகரித்து நீதிமன்றத்தில் ஆவணமாக தாக்கல்செய்ய அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணிக்கு உத்தரவிடுகிறேன்.

தூக்கு தண்டனையால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தி அதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கவேண்டும். மரண தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு வலியற்ற முறையில் மரணத்தை நிறைவேற்றக் கோரும் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் திறந்த மனதுடன் உள்ளது. தூக்கு தண்டனைக்குப் பதிலாக துப்பாக்கியால் சுடுதல், மரண ஊசி அல்லது மின்சார நாற்காலி போன்றவை குறித்து பரிசீலிக்கலாம் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் உடனடியாக முடிவெடுக்க முடியாது. எனவே, இதுகுறித்து நாங்கள் பரிசீலிக்கிறோம். இந்த விஷயத்தில் நமக்கு போதுமான அறிவியல் தரவுகள் தேவை.இதுதொடர்பாக கமிட்டி அமைத்து விசாரிக்கலாம். எனவே,இந்த வழக்கை வேறு ஒரு தேதிக்கு தள்ளிவைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து வழக்கை மே 2-ம் தேதிக்கு தலைமை நீதிபதி தள்ளிவைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory