» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எல்இடி விளக்குகள், கிரைண்டர், வாட்டர் ஹீட்டர்கள், பால் பண்ணை இயந்திரங்கள் மீதான வரி உயர்வு!

வியாழன் 30, ஜூன் 2022 11:13:44 AM (IST)

எல்இடி விளக்குகள், வாட்டர் ஹீட்டர்கள், கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. 

ஜிஎஸ்டி கவுன்சிலின் 47-வதுகூட்டம் சண்டீகரில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதில், சில பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்த முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் இழப்பீடு வழங்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களும் வலியுறுத்தின. ஆனால், அது தொடர்பான முடிவு இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. ஆகஸ்டில் நடக்கவுள்ள அடுத்த கூட்டத்தில் இதுகுறித்த முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

வரி உயரும் பொருட்கள்

* எல்இடி விளக்குகள், மின் விளக்குகள் தொடர்பான உதிரி பாகங்கள், பிரின்டிங் மை, பேனா மை, கத்தி, பிளேடு ஆகியவற்றின் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

* கிரைண்டருக்கு ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

* மோட்டார் பம்புகள், பால் பண்ணை இயந்திரங்கள் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

* வணிக பெயரில் அல்லாத பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் அரிசி, பருப்பு, பொரி உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

* சூரியசக்தியில் இயங்கும் வாட்டர் ஹீட்டர்கள், பதப்படுத்தப்பட்ட தோல் மற்றும் காலணி தயாரிப்பு தொடர்பான ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

* காசோலை புத்தகத்துக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

* மின்னணு கழிவுகளுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

* ரூ.1,000-த்துக்கு குறைவான ஓட்டல் அறை வாடகைக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

* சாலை, ரயில்வே, மெட்ரோ, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், சுடுகாடு உள்ளிட்டவை தொடர்பான ஒப்பந்தப் பணிகளுக்கு ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப் படுகிறது.

* உணவுப் பொருட்களை பேக் செய்ய பயன்படுத்தப்படும் டெட்ரா பேக் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டபோது, மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை மத்திய அரசு ஜூன் 2022 வரை அளிப்பதாக உறுதி அளித்தது. இந்த இழப்பீடு தொகையானது ஆடம்பர பொருள்கள் மீது விதிக்கப்படும் செஸ் மூலம் திரட்டப்பட்டு அதற்கென உருவாக்கப்பட்ட நிதியத்தில் இருந்து மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டது. கடந்த வாரம் இத்தகைய பொருட்கள் மீது விதிக்கும் செஸ் கால அவகாசத்தை மார்ச் 2026 மார்ச் வரை மத்திய நிதி அமைச்சகம் நீட்டித்தது.

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வருவாய் இழப்பு ஏற்பட்டதால் பெரும்பாலான மாநிலங்கள் இதை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

பொருட்கள் மீதான வரியில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஆய்வு செய்ய அமைச்சர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. இக்குழு ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம், குதிரைப் பந்தயம் உள்ளிட்டவற்றுக்கு வரி விதிப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சில பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பது குறித்தும் இக்குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும். வரி விதிப்பு, வரிக்குறைப்பு உள்ளிட்ட விவரம் ஜூலை 15-ம் தேதி குழு அறிக்கைக்கு பிறகு வெளியாகும் என்று தெரிகிறது.

அடுத்த கூட்டம் மதுரையில்

அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மதுரையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான ஜிஎஸ்டி கூட்டங்கள் டெல்லியில் நடந்துள்ளன. இதுதவிர, கோவா, உதய்பூர், ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களிலும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. கரோனா காலகட்டத்தில் கூட்டங்கள் காணொலி வாயிலாக நடத்தப்பட்டது. இதுவரையில் தமிழகத்தில் ஜிஎஸ்டி கூட்டம் நடந்ததில்லை. இந்நிலையில் தமிழகத்தில் முதல்முறையாக ஜிஎஸ்டி கூட்டம் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory