» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மார்ச் 31-க்குள் பான் - ஆதார் இணைக்காவிடில் ரூ.10,000 அபராதம்? மத்திய அரசு எச்சரிக்கை!

ஞாயிறு 16, ஜனவரி 2022 10:22:57 AM (IST)

பான் எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஆதாருடன் இணைக்காத பான் கார்டு செயல் இழந்ததாக அறிவிக்கப்படும். அந்த கார்டை பயன்படுத்தினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் 2017- ஜூலை 1-ல் அறிவிக்கை வெளியிட்டது. அதன்பின் பான் -- ஆதார் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது இதற்கான காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பான் - ஆதார் இணைப்புக்கான அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. மார்ச் 31க்குள் இணைக்காவிட்டால் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டு செயல் இழந்ததாக அறிவிக்கப்படும். அந்த பான் கார்டை பயன்படுத்துவோருக்கு வருமான வரித்துறை சார்பில் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.செயல் இழந்த பான் கார்டை வைத்திருப்போர் மீது வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும் செயல் இழந்த பான் கார்டை வங்கி கணக்கு துவக்குவது ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்தல் உள்ளிட்டவைக்கு அடையாள ஆவணமாக பயன்படுத்தினால் அதற்கு அபராதம் விதிக்கப்படாது.ஆனால் செயல் இழந்த பான் கார்டை அடையாள ஆவணமாக காட்டி வங்கி கணக்கு துவங்கப்பட்டால் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்யும் போது பல்வேறு சிக்கல்களைசந்திக்க வேண்டியிருக்கும். ஏனெனில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலான பரிவர்த்தனைகள் வருமான வரித்துறையின் கண்காணிப்பில் வரும். 

அதனால் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்தாலோ பணம் எடுத்தாலோ பான் கார்டு எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். செயல் இழந்த பான் கார்டு எண்ணை சமர்ப்பித்தால் பணத்தை டிபாசிட் செய்ய முடியாது; எடுப்பதும் பிரச்னையாகிவிடும். பான் கார்டு செயல் இழந்துவிட்டால் புதிய கார்டு பெற விண்ணப்பிக்கத் தேவையில்லை. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைத்தால் உடனடியாக பான் கார்டு செயல்பாட்டுக்கு வந்து விடும்.இவ்வாறு அவர் கூறினார்.வருமான வரித்துறை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பான் - ஆதார் இணைப்பை மேற்கொள்ளலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory