» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாம்பை கடிக்கவிட்டு மனைவி கொலை: கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு!

புதன் 13, அக்டோபர் 2021 3:41:28 PM (IST)

கேரள மாநிலம் கொல்லம் அருகே, பாம்பை கடிக்கவிட்டு 25 வயது பெண் இறந்த வழக்கில், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அவரது கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் கூடுதலாக 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர் சூரஜ் எஸ்.குமார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உத்ரா (25) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.கடந்த 2020-ம் ஆண்டு மே 7-ம் தேதி வீட்டில் படுக்கை அறையில் நல்ல பாம்பு கடித்து உத்ரா இறந்து கிடந்தார். உத்ரா இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்பு, ஒரு முறை பாம்பு அவரைக் கடித்துள்ளது. ஆனால் அதில் அவர் பிழைத்துக் கொண்டார். இதனால் உத்ரா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.

காவல்துறையினரிடம் உத்ராவின் பெற்றோர் கூறியபோதுதான், விசாரணை நடத்தி வந்த காவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் சூரஜ் கைது செய்யப்பட்டார். விசாரணையில், இரண்டாவது திருமணத்துக்குத் தடையாக இருந்த மனைவி உத்ராவை பாம்பை கடிக்க வைத்துக் கொலை செய்தது தெரியவந்தது. இவ்வழக்கில், சூரஜ் குற்றவாளி என்று கடந்த திங்கள்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இவருக்கான தண்டனை விவரங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது.

அதில் சூரஜ்ஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் கூடுதலாக 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து கொல்லம் கூடுதல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. நேரடியாக சாட்சிகள் ஏதுமின்றி, அறிவியல்பூர்வமான தடயங்கள் மற்றும் சூழ்நிலைகளை மட்டுமே ஆராய்ந்து, இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

சூரஜ் தரப்பில் கருணை கோரிய நிலையில், உத்ர பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மரண தண்டனைக் கோரினார். குற்றவாளிக்கு எந்த கருணையும் காட்ட முடியாது என்று கூறிய நீதிபதிகள், இரட்டை ஆயுள் தண்டனை விதித்தனர். ஆனால், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய உத்ராவின் பெற்றோர், இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றம் செல்லவிருப்பதாகக் கூறுகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory