» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை : 5 பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தந்தையால் விபரீதம்!

செவ்வாய் 21, செப்டம்பர் 2021 3:16:00 PM (IST)

பெங்களூருவில் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்த வழக்கில் தனது தந்தைக்கு 5 பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மகன் எழுதிய கடிதத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

பெங்களூரு பேடரஹள்ளி அருகே திகளரபாளையாவை சேர்ந்தவர் சங்கர். இவர், பத்திரிகை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி பாரதி, மகள்கள் சிஞ்சனா, சிந்துராணி, மகன் மதுசாகர் ஆகிய 4 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருந்தனர். மேலும் சிந்துராணியின் 9 மாத குழந்தையும் பசியால் இறந்திருந்தது. இதுகுறித்து பேடரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை மற்றும் பேரக்குழந்தை சாவுக்கு தனது மனைவி பாரதியே காரணம் என்று போலீசாரிடம் சங்கர் தெரிவித்திருந்தார். 

ஆனால் நேற்று முன்தினம் சங்கர் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், அவரது மகள்கள் மற்றும் மகன் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதங்கள் சிக்கியது. அதில், குடும்பத்துடன் தற்கொலை செய்வதற்கு தந்தையின் கள்ளத்தொடர்பே காரணம் என்று எழுதி வைத்திருந்தார்கள். இது 4 பேர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. மேலும் மனைவி, மகள்கள், மகன் சாவுக்கு சங்கரே காரணம் என்று தற்கொலை கடிதங்களில் கூறப்பட்டு இருந்ததால், இதுகுறித்து சங்கரிடம் விசாரிக்க பேடரஹள்ளி போலீசார் முடிவு செய்தார்கள். 

இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி சங்கருக்கு போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்திருந்தனர். அதைத்தொடர்ந்து, நேற்று காலையில் பேடரஹள்ளி போலீஸ் நிலையத்தில் சங்கர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் காலையில் இருந்து மாலை வரை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது மகன், மகள்கள் தற்கொலை கடிதத்தில் எழுதி இருந்த கள்ளத்தொடர்பு விவகாரம் குறித்து சங்கரிடம் போலீசார் விசாரித்து தகவல்களை பெற்றுக்கொண்டனர். அத்துடன் மனைவி, மகள்கள், மகனுக்கு ஏதேனும் தொல்லை கொடுத்தது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். 

முதற்கட்ட விசாரணையில், 4 பேரின் தற்கொலைக்கு சங்கர் முக்கிய காரணம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரிடம் மேலும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கிடையில், சங்கரின் மகள்கள் சிஞ்சனா, சிந்துராணி ஆகிய 2 பேரும் தலா 4 பக்கங்களை கொண்ட தற்கொலை கடிதமும், மதுசாகர் 19 பக்கங்களை கொண்ட தற்கொலை கடிதமும் எழுதி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இவர்களில் மதுசாகர் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தில் தந்தையின் கள்ளத்தொடர்பு விவகாரம், அவரால் தனது தாய், சகோதரிகளுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து விரிவாக எழுதி இருந்தார்.

அதன்படி, தனது தந்தைக்கு 5 பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக மதுசாகர் தெரிவித்துள்ளார். தந்தையின் கள்ளத்தொடர்பு விவகாரத்தால் எனது தாய் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த விவகாரம் குறித்து கேட்டதால் தான் தாயுடன், தந்தை தொடர்ந்து சண்டை போட்டு வந்தார். எனது தாய்க்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொடர்ந்து தொல்லை கொடுத்தார். சகோதரிகளுக்கும் இதுபோன்று பல்வேறு தொல்லைகளை கொடுத்தார். 

பெற்ற மகள் என்றுகூட பார்க்காமல், தொல்லை கொடுத்து வந்ததால் தற்கொலை முடிவை எடுத்தோம் என்று மதுசாகர் கடிதத்தில் எழுதி வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தற்கொலை கடிதங்கள், மகனின் குற்றச்சாட்டு சங்கருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. 4 பேரையும் தற்கொலைக்கு தூண்டியதாக சங்கரும் இந்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. தந்தை மீது மகன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தை மறுப்பு

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை வழக்கில் தன் மீது மகன் குற்றச்சாட்டு கூறி இருப்பது குறித்து சங்கர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "எனது மகன் என் மீது கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை. அவர் தற்கொலை கடிதத்தில் எழுதி வைத்திருப்பது அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. என் மீது திட்டமிட்டு இந்த குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார். இந்த விவகாரம் குறித்து போலீஸ் விசாரணையின் போது அனைத்து விவரங்களையும் தெரிவிப்பேன். நான் 25 ஆண்டுக்கு முன்பாகவே பெங்களூருவில் 2 மதுபான விடுதிகள் நடத்தினேன். சொந்த காலில் நின்று பணம் சம்பாதித்துள்ளேன். போலீஸ் விசாரணையில் உண்மை வெளியே வரும், " என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory