» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 22, ஜூன் 2021 4:52:49 PM (IST)

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என   உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 28-ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் என 4 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 4 வண்ணங்களில் ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன.

இதனை தொடர்ந்து ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து ஒன்றிய தலைவர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் தேர்வுக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றனர்.

மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை. நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்த 9 மாவட்டங்களிலும் வார்டு மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடத்தப்படாமல் இருந்ததால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்தநிலையில் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், தமிழக தேர்தல் ஆணையத்துக்கு இன்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தனர். அதில், செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடுவது, ஓட்டுப்பதிவு நடத்துவது, வாக்கு எண்ணிக்கையை முடித்து முடிவுகளை அறிவிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செப்டம்பர் 15-ம் திக்குள் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். உள்ளாட்சி தேர்தல் நடத்த நிறைய கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. தற்போது மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் இனி கால அவகாசம் வழங்கமுடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory