» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா தொற்றுக்கு எதிரான போரில் புதிய மைல்கல்: தண்ணீரில் கரைத்து குடிக்கும் மருந்து அறிமுகம்

செவ்வாய் 18, மே 2021 9:06:26 AM (IST)

தண்ணீரில் கரைத்து குடிக்கும் கரோனா மருந்தை மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங் மற்றும் ஹர்சவர்தன் இணைந்து நேற்று அறிமுகம் செய்து வைத்தனர்.

கரோனாவின் 2-வது அலை இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதற்கான மருந்துகளை கண்டறியும் பணியில் நாட்டின் பல நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன. இதில் மத்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் (டி.ஆர்.டி.ஓ.) தீவிரமாக களத்தில் இறங்கியிருந்தது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான அணு மருத்துவம் மற்றும் அறிவியல் ஆய்வகமானது, ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டி ஆய்வகத்துடன் இணைந்து இந்த ஆய்வுப்பணியில் ஈடுபட்டது. இதன் பலனாக கரோனா மருந்தை கடந்த ஆண்டு இந்த நிறுவனம் உருவாக்கியது.

2-டியோக்சி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) என பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து பொடி (பவுடர்) வடிவில் உருவாக்கப்பட்டு உள்ளது. தண்ணீரில் கரைத்து குடிக்கும் இந்த மருந்து 3 கட்ட மருத்துவ சோதனையிலும் வெற்றிகரமாக செயல்படுவது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த மருந்தை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்திக்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி இந்த மாத தொடக்கத்தில் அனுமதி வழங்கினார்.

இதைத்தொடர்ந்து இந்த மருந்து நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தன் ஆகியோர் இணைந்து இந்த மருந்தை அறிமுகம் செய்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் டி.ஆர்.டி.ஓ. தலைவர் சதீஷ் ரெட்டி, எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.டி.ஆர்.டி.ஓ. தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், இந்த மருந்தை உருவாக்கிய அதிகாரிகளை பாராட்டினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த மருந்துக்கான ஆய்வு மற்றும் உருவாக்கத்துக்கு துணை நின்ற டி.ஆர்.டி.ஓ. உள்பட அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கரோனாவை கட்டுப்படுத்துவதற்கு 2-டியோக்சி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) மருந்து மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவின் அறிவியல் வலிமைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். கரோனாவுக்கு பயன்படுத்தப்படும் பிற மருந்துகளை ஒப்பிடுகையில், இந்த மருந்து கொடுக்கப்படும் நோயாளிகள் 2½ நாட்கள் முன்னதாகவே குணமடைவதாக என்னிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆக்சிஜன் தேவையையும் இது கணிசமாக குறைக்கிறது.

இதில் சிறப்பு என்னவென்றால், பொடியாகவே தயாரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் எளிதாக தண்ணீரில் கரைத்து இதை குடிக்க முடியும். கரோனாவுக்கு எதிரான சிகிச்சையில் ஒரு நம்பிக்கை ஒளியை இந்த மருந்து ஏற்றியிருக்கிறது. அதேநேரம் நாம் ஒய்ந்திருக்கவோ, களைப்படையவோ கூடாது. ஏனெனில் இந்த அலை 2-வது முறையாக வந்துள்ளது. எனவே மிகுந்த எச்சரிக்கையுடனே நாம் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும்.இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

கரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள இந்த 2-டிஜி மருந்து கரோனா நோயாளிகளுக்கு விரைவான குணத்தை வழங்குவதும், ஆக்சிஜன் தேவையை கட்டுப்படுத்துவதும் பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டு இருந்தது. இந்த மருந்து தற்போது பயன்பாட்டுக்கு வந்திருப்பதன் மூலம் கரோனா நோயாளிகளின் உயிரிழப்பை வெகுவாக கட்டுப்படுத்த முடியும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அந்தவகையில் கரோனாவுக்கு எதிரான போரில் மிக முக்கியமான மைல்கல் சாதனையாக பார்க்கப்படுகிறது. இதில் முதற்கட்டமாக 10 ஆயிரம் பாக்கெட் மருந்துகள் டெல்லியில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதேநேரம் இந்த மருந்து பொதுச்சந்தையில் விற்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து

adminமே 18, 2021 - 01:12:32 PM | Posted IP 108.1*****

atha evanachum injection la poduvaan paren

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory