» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அமெரிக்க டாலர் கடத்தல் வழக்கில் பினராயி விஜயனுக்கு தொடர்பு: ஸ்வப்னா சுரேஷ் தகவல்

சனி 6, மார்ச் 2021 8:12:39 AM (IST)

அமெரிக்க டாலர் கடத்தல் வழக்கில் கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்டுள்ள தகவலால் கேரளத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் கடந்த ஆண்டு 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் இருந்து ஓமன் தலைநகர் மஸ்கட்டுக்கு அமீரக தூதரக அதிகாரி வழியாக ரூ.1.30 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலர் கடத்தப்பட்ட வழக்கிலும் ஸ்வப்னா மற்றும் சரித் ஆகியோரின் தொடர்பு இருப்பது தெரியவந்தது. எனவே அவர்கள் இருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேசை சிலர் சந்தித்து, இந்த வழக்குகளில் அரசின் முக்கிய புள்ளிகளை காட்டிக்கொடுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து ஸ்வப்னா சுரேசுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்குமாறு கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு அரசுக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து மாநில அரசு கேரள ஐநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்குக்கு சுங்கத்துறை சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலங்கள் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் அடங்கியுள்ளன.

இதில் முக்கியமாக கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மற்றும் மாநில அமைச்சர்கள் சிலர் தொடர்பான விவகாரங்கள் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளன. அந்தவகையில் அமெரிக்க டாலர் கடத்தலில் முதல்-அமைச்சர் மற்றும் சபாநாயகருக்கு தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார். குறிப்பாக அவர்கள் இருவரும் பங்கேற்ற ஒரு நிகழ்வில்தான் அமீரக தூதரக அதிகாரி மூலம் இந்த பரிமாற்றம் நடந்ததாகவும் அவர் தெளிவாக குறிப்பிட்டிருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயனுக்கும், தூதரக முன்னாள் அதிகாரிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கூறியுள்ள ஸ்வப்னா சுரேஷ், அதன்மூலம் இந்த நிதி பரிமாற்றங்கள் எளிதாக மேற்கொள்ளப்பட்டதாகவும் வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் பினராயி விஜயன், அவரது முதன்மை செயலாளர், உதவியாளர்களுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததையும் ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலமாக அளித்துள்ளார். சுங்கத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள இந்த பிரமாண பத்திர விவகாரம் கேரள அரசியலில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பினராயி விஜயன் மீதான இந்த குற்றச்சாட்டு இடதுசாரிகளுக்கு தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory