» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜி.எஸ்.டி.யின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்படுமா? நிர்மலா சீதாராமன் பதில்

சனி 6, மார்ச் 2021 8:09:48 AM (IST)

ஜி.எஸ்.டி.யின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டு வரப்படுமா என்ற கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது சாதாரண மக்களுக்கு பெரும் சுமையாக மாறி உள்ளது. மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-க்கு மேல் உயர்ந்துள்ளது. இந்த விலையில் 60 சதவீதம் மத்திய, மாநில அரசுகளின் வரி ஆகும். டீசல் விலையில் 56 சதவீதம் மத்திய, மாநில அரசுகளின் வரிக்குத்தான் போகிறது.

இந்த வரி விதிப்பால்தான் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது. இந்த தருணத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லியில் நேற்று இந்திய பெண் பத்திரிகையாளர்கள் சங்கத்தில் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: இது ஒரு சுமை. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. பொதுமக்களின் இந்த சுமையை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவற்றின் விலையை நிர்ணயிப்பது சிக்கலான பிரச்சினை ஆகும்.

எனவே நான் தர்மசங்கடமானது என்ற வார்த்தையை பயன்படுத்துகிறேன். இது பற்றி மத்திய, மாநில அரசுகள் பேச வேண்டும். இது மத்திய அரசின் கடமை மட்டுமல்ல. மாநில அரசுகளும் வரிகள் விதிக்கின்றன. பெட்ரோல், டீசல் மீது விதிக்கிற வரி வருவாயை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன. மத்திய அரசு வசூலிக்கிற வரி வருவாயில் 41 சதவீதம் மாநிலங்களுக்கு செல்கிறது. எனவே இவற்றின் விலையை குறைப்பது பற்றிய மத்திய, மாநில அரசுகள்தான் இணைந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பெட்ரோல், டீசலை சரக்கு, சேவை வரியின் (ஜி.எஸ்.டி.) கொண்டு வருவதுபற்றி நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், "ஜி.எஸ்.டி. கவுன்சில் இந்த பிரச்சினையை எடுத்துக்கொள்கிறபோது, எடுத்துக்கொள்ளட்டும். விவாதிக்கட்டும். இது ஜி.எஸ்.டி. கவுன்சில் எடுக்க வேண்டிய முடிவு ஆகும்” என்று கறினார். "இந்த மாதம் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூடுகிறபோது, இதற்கான யோசனையை மத்திய அரசு முதலில் எடுத்து வைக்குமா?” என கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு நிர்மலா சீதாராமன், "ஜி.எஸ்.டி. கவுன்சில் கூடும் தேதி நெருங்கும்போது இதுபற்றி முடிவு எடுக்கப்படும்” என பதில் அளித்தார்.

ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வரப்பட்டால் என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது. ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வருகிறபோது, பெட்ரோல் விலை ரூ.75 வரைக்கும், டீசல் விலை ரூ.68 வரைக்கும் குறைய வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் மத்திய மாநில அரசுகளுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படலாம் எனவும், இந்த இழப்பானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதமாக இருக்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory